. -->

Now Online

FLASH NEWS


Wednesday 28 July 2021

கையடக்க சிபியுவை உருவாக்கிய 14 வயது மாணவர்: முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு

கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.


இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (28.7.2021) தலைமைச் செயலகத்தில், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மாதவ் சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியைக் (CPU) காண்பித்து வாழ்த்து பெற்றார்.

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ், ஒன்பதாம் வகுப்புப் பயின்று வருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான Java, Python, C, C++, Kotlin ஆகியவற்றைப் படித்துள்ளார்.

இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க Mini CPU கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதையும் கேள்விப்பட்ட தமிழக முதல்வர், எஸ்.எஸ்.மாதவை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் (Online) மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலைக் கேட்டறிந்த முதல்வர் அம்மாணவனை வாழ்த்தினார்.

எஸ்.எஸ்.மாதவின் கண்டுபிடிப்பினைப் பாராட்டிய தமிழக முதல்வர், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது, எஸ்.எஸ்.மாதவின் பெற்றோர்கள் உடனிருந்தனர்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.