இரவு சாப்பிட்டதும் தூங்கச் செல்வதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. அல்லது டி.வி, மொபைலில் மூழ்கி இருப்பது, அதன் பிறகு தூங்கச் செல்வது என்று இருப்பார்கள். இன்றைய பிசியான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பதுதான் எல்லோரின் ஒரே மாதிரியான பதிலாக உள்ளது. ஆரோக்கியமாக, ஃபிட்டாக இருக்க கடினமான பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. குறைந்தது நடைப்பயிற்சி செய்தால் கூட போதும். குறிப்பாக இரவு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கழித்து நடைப்பயிற்சி செய்வது அதிக பலன் அளிக்கக் கூடியதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து நடைப்பயிற்சி செய்வதால் உணவு செரிமானம் விரைவு படுத்தப்படுகிறது.
நடைப்பயிற்சிக்குப் பிறகு செரிமானம் சீராக நடைபெறும். இதன் காரணமாக உணவை செரிமானம் செய்ய தேவையான நொதிகள், அமிலங்கள் சுரப்பு சீராகிறது, உணவிலிருந்து ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் திறன் அதிகரிக்கிறது. தூக்கத்தின் தரம் மேம்படும்.
இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது, குறைந்தது 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். சாப்பிட்டு முடித்த சிறிது நிமிடங்களிலேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடும். நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நம்டைய உடல் அந்த குளுக்கோஸை ஆற்றலாக பயன்படுத்திக்கொள்ளும். இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
நடைப்பயிற்சி செய்வதால் உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வைத் தரும். மனது அமைதி அடையும். இதனுடன் நடைப்பயிற்சி செய்த கலைப்பு இணையும் போது தூக்கம் சீக்கிரம் வரும். அது மட்டுமின்றி இரவில் தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் பிரச்னை இருக்காது.
சரியான தூக்கம், ஊட்டச்சத்து கிரகித்தல், உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். நடைப்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது உடலில் நுழையும் நுண்ணுயிரிகள் மற்றும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் போராடத் துணை செய்யும்!
