ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை.
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.
இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது
விடுதலை இந்தியாவின் கனவு நனவாகி வரலாறு படைக்கப்பட்டுள்ளது.!
நூறாண்டுகளில் தடகளத்தில் முதல் பதக்கம்.
அதுவும் தங்க பதக்கம்.
ஒலிம்பிக் தடகள மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கிறது.


