நம் எல்லோருக்கும் கோபம் வருகிறது. வார்த்தைகளுக்கு வசப்படாத கோபம் வருகிறது. புத்தியால் கட்டுப்படுத்த இயலாத கோபம் வருகிறது.
நல்லவருக்கு, கெட்டவருக்கு, பலசாலிக்கு, அடிமைத் தொழில் செய்பவருக்கு அதிகாரிகளுக்கு எந்த பேதமும் இல்லாமல் கோபம் வருகிறது.
சில சமயம் அதை அடக்க முடியாமல் போய் விடுகிறது. தசை வலிமையாய் வஞ்சம் தீர்க்கும் செயலாய் வெளிப்படுகிறது.
கோபத்தை அடக்குவது தவறு என்று நான் படித்திருக்கிறேன் உணர்ந்திருக்கிறேன்.
சினம் அடக்க அது வெஞ்சினம் ஆகிறது. அழுத்தி உள்ளே புதைக்க மீண்டும் பீறிட்டுக் கிளம்புகிறது. இதன் விளைவு விபரீதத்தில் முடிகின்றது.
கோபத்தை அடக்க முயற்சிக்காமல் ஆராய முயற்சி செய்யுங்கள்.
ஆராய்வது தான் அடக்கும் வழிகள் என்று நினைக்கின்றேன்.
'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பது கூட ஆழ யோசித்துப் பார்க்கையில் எதிராளியின் கோபத்திற்கு உடனே எதிர்கொள்ளாமல், அவன் கோபத்தை முற்றிலும் ஏற்று, ஆராய்ச்சிக்கு முயற்சிக்கும் அடிப்படைச் செயல் என்றே தோன்றுகிறது.
ஓர் அறை கொடுக்க வந்தவனை நான்கு அறை தரும்படிச் செய்து விட்டால் அவன் கோபமும் தளரும், அறை வாங்கிய வலியில் உட்கார்ந்து விட்ட நாம், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது புரியும் என்று தோன்றுகிறது.
உண்மையில் கோபமென்பது இயலாமையின் வெளிப்பாடு. சூழ்நிலையின் தாக்கத்தில் தடுக்கி விழுந்து விடுகிற துரதிஷ்டம். ஆற்றாமை எனும் கழிவு நீர் புகும் சாக்கடை, அவசரத்தில் திசைமாறும் விஷயம்.
உன்னிப்பாய் கவனிக்க கோபம் என்பது பல நேரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவில் குறைந்தோர் மீதே காட்டப்படுகின்றது. பற்றில்லாதவனுக்கே கோபமில்லாமல் போகும் என்று படித்திருக்கிறேன்.
பற்றற்றிருப்பது என்பது நம்மைப் போல் பாமரர்களுக்கு முடியாத விசயம். பற்றுகள் அதிகரிக்க கோபம் இயல்பு. இந்த இயல்பைச் சரியானபடி பழகாது போக இம்சைகள் வளரும். இம்சைகள் வளர கோபம் பெருகும். பிறகு முடிவில்லாத விஷவட்டம்.
எனவே தான் இந்த இயல்பை அடக்கி வைக்காமல் ஆராய வேண்டும் என்கின்றேன். கோபம் எழுகிற போதே பிரித்துப் பார்க்க எண்ணுகிறேன். அப்படிப் பிரிக்க கோபம் பலகீனம் அடைகிறது. அதன் அடிவேர் புரிய , வெளிப்படுத்துவதில் நிதானம் வருகிறது.
கோபத்தை பிரிப்பது அடிவேரை அறிவது என்று எழுதினால் எவருக்கும் எளிதில் புரியாது அதனால் கோபம் தவிர்ப்பது பற்றி எனக்குத் தெரிந்த, நான் கையாளுகிற வழிமுறைகள் சொல்ல விரும்புகின்றேன்.
எனக்கு கோபம் வருகிறது. வெளிப்படுத்த சொல், செயல் துடிக்கின்றன. அதை உடனே வெளிப்படுத்தாமல் 5 நிமிடம் தள்ளிப் போடுகிறேன். அப்பொழுது வேகம் மட்டுப்படுகிறது. இன்னும் மட்டுப்பட விரும்பினால் மறுபடியும் 5 நிமிடம் தள்ளுகிறேன்.
அந்த முதல் நிமிடத்திற்கு பத்தாவது நிமிடத்திற்கும் மிகுந்த வித்தியாசம் இருப்பதை உணர்கிறேன். கோபமூட்டியவரே, திடமாகவும், திறனாகவும், சமாளிக்கும் திறமை ஏற்பட்டு விடுகிறது.
இந்த இடைப்பட்ட பத்து நிமிடத்தில் வானம் பார்க்கிறேன். தரையில் உள்ள கட்டங்களை கண்ணால் அளவெடுக்கிறேன். பேப்பரும் பேனாவும் இருந்தால் படம் போடுகிறேன். கண்ணாடி முன் நின்று ஒரு முறை தலையைக் கலைத்து விட்டு மீண்டும் வாருகிறேன்,அல்லது பின்பக்கம் போய் வருகிறேன்.
இதில் படபடப்பு கொஞ்சம் குறைகிறது. மறுப்போ, எதிர்ப்போ, கோபமாக இல்லாமல் தெளிவாக வருகிறது. சினம் வெஞ்சினமாக மாறாமல் எதிராளியின் பலம் அறிந்து செயல் திறனை அதிகரிக்கிறது. செயல் திறன் அதிகரிக்க கோபப்பட்ட எதிரியை எப்படிக் கையாள வேண்டும் என்கிற நிதானமும் வந்து விடுகிறது.
எனக்குள்ளும் நெடுநாளையக் கோபங்கள் உண்டு. பிடரி சிலிர்த்து, கும்பளத்தைத் தரையில் கீறி,பல் காட்டிக் கனைக்கும் குதிரைகளாய்ச் சில கோபங்கள் உண்டு. அவைகளைத் தட்டிக் கொடுத்துப் பழக்கி வருகிறேன். அதுகளுக்குச் சேணமிட்டு வாழ்க்கையெனும் வண்டியில் பூட்டி வருகிறேன்.
என் கோபங்களே நான் நினைக்கும் என் இலக்குகளுக்கு எளிதில் எடுத்துப் போகின்றன. பிறரைப் பழி வாங்குவதை விட்டுவிட்டு என் பயணத்திற்கு உதவி செய்கிறது.
கோபம் நல்லது..!
அது காட்டுக்குதிரை. புத்தியென்னும் கயிறு கட்டிப் பழக்கப்படுத்துங்கள்.
வெற்றி எளிது. வெற்றி கிடைத்த பின் நம் கோபம் நமக்கே நகைப்பாகும் கோபமூட்டியவரைப் பயம் தாக்கும்.
நம்மால் நாமே அழிவது தான் நகைப்புக்கிடமாகும். நாம் நல்லவர் என்ற நினைப்பே நம் கோபம் சந்தேகத்திற்கிடமாகும்.
ஏனோ தெரியவில்லை...
என்கிற கட்டுரைத் தொகுப்பு
எழுத்துச் சித்தர் பாலகுமாரன்..