காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும்.மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் கான நேரத்தை அதிகரிக்கும். இரவு நேரங்களில் உடல் ஓய்வுக்கான நேரம் என்பதால் உள் உறுப்புகளுக்கு அதிகமான வேலையை தராமல் இருப்பது ஆரோக்யத்துக்கு நன்மை அளிப்பதாக இருக்கும்.
சில வகை உணவுடன் ஒரு சில உணவை சேர்த்து உண்ணக்கூடாது. அப்படி உண்பதால், உங்களுக்கு சில வயிறு சம்மந்தமான கோளாறும் ஏற்படும். சில வகை உணவுகளை சேர்த்து உண்ணும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் அஜீரணம் ஆகாமல் இருத்தல், வயிறு உப்புசம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. உதாரணாமாக,நெய்யுடன் வாழைப்பழத்தையும், பாலுடன் முலாம் பழத்தையும் சேர்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
கொழுப்பை ஒதுக்குதல்
நம்மில் பெரும்பாலானோர் கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதை அறவே விரும்புவதில்லை. கொழுப்பினை உண்டால் உடல் குண்டாகி விடும் என்ற பயமே கொழுப்பை ஒதுக்குவதற்கு காரணம். ஆனால், சரியான அளவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான அளவிலான கொழுப்பு ஒருபோதும் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி நமது உடல் சரியாக செயல்பட சில ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை என்று அறியப்பட்டுள்ளது.
நின்று கொண்டே உண்பது
தற்போதைய அவரச உலகில் யாரும் சம்மணம் போட்டு உட்கார்ந்து உண்பதே இல்லை. நின்று கொண்டே தங்கள் உணவை அவசர அவசரமாக உண்டு முடித்து விடுகின்றனர். நீங்கள் நின்று கொண்டே உண்பதால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இது உங்கள் வயிற்றுப் பகுதியில் வீக்கம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் உண்ணும் தோரணை செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் நீர் அருந்தும் போதும் நின்று கொண்டே குடிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
வேகமாக சாப்பிடுதல்
உணவினை நன்கு மென்று உண்ணாமல் மிக வேகமாக வாயில் போட்டு முழுங்குவதும் உங்கள் செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் நம் முன்னோர்கள் நொறுக்கத் தின்றால் நூறு வயது என்று கூறியுள்ளனர். வேகமாக சாப்பிடுவதால் உங்களில் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி, வேகமாக சாப்பிடுவது உங்கள் இன்சுலினையும் பாதிக்கும், பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். உணவை சரியாக மென்று உண்ணும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
குறைந்த சாப்பாடு
நம் உடலுக்குத் தேவையான உணவை நாம் தினமும் அதற்கு அளிக்க வேண்டும். ஆனால், இன்றைய நவ நாகரீக உலகில் குறைவாக சாப்பிடுவதையே பலர் பெருமையாகக் கருதுகின்றனர். இதிலும் மிக முக்கியமாக பெண்கள் தான் மிகவும் குறைவான உணவை உட்கொள்கின்றனர். நிறைய சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று குறைந்த அளவிலான உணவை உண்ணுகின்றனர். ஆனால், சரியான அளவில் நாம் உணவினை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.எனவே பெண்களே, இதுநாள் வரை நீங்களும் இதுபோன்ற தவறுகளை செய்திருந்தால் திருத்திக் கொண்டு சரியான உணவு முறையைப் பின்பற்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள்.
அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்கள், காய்கறிகள், தானியங்களை அதிகம் பயன்படுத்தி கொள்வது நல்லது என்கிறார்கள் டயட்டீஷியன்கள். இயற்கை அளித்திருக்கும் அற்புதங்களில் இதுவும் குறிப்பிடத்தக்கது. அதனால் கிடைக்கும் போது அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நொறுக்கத் தின்றால் நூறு வயது என்ற பழமொழி மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள்.
