எத்தனை நாள் ஆகிவிட்டது உங்களைப் பார்த்து
எப்படி உணர்ந்தீர்கள் வீட்டிலே இருந்து
தொலைவிலே இருக்கின்ற பிள்ளையைக் காண்கின்ற
பெற்றோராய் நாங்கள் சிலிர்க்கின்றோம் இன்று.
ஆயிரம் கவலைகள் அணியணியாய் வந்தாலும்
அவற்றையெல்லாம் போக்குகின்ற மருந்தெமக்கு நீங்கள்
முகத்திலே சிரிப்போடும் உடம்பிலே துடிப்போடும்
நீங்கள் சொல்லும் வணக்கத்தின் ஊக்கத்தில் நாங்கள்.
புன்னகையைப் பார்ப்பதற்கு ஆசையுண்டு என்றாலும்
முகக்கவசம் கட்டாயம் என்பதையும் அறிவோம்
நட்புகளை அணைத்து மகிழ்ந்திடவே விரும்புவீர்கள்
சமூக இடைவெளி கட்டாயம் உணர்வோம்.
கண்களில் தெரிகின்ற ஒளியொன்று போதும்
சுறுசுறுப்பைக் காட்டுகின்ற சொற்களே போதும்
கற்க வேண்டும் என்கின்ற ஆவலே போதும்
எங்களுக்கு உங்களிடம் அதுமட்டும் போதும்.
வாருங்கள் செல்லங்களே ஆரம்பம் குறிப்போம்
தடையேதும் இனியில்லை நல்லதே நினைப்போம்
ஒழுக்கமுடன் கல்வி கற்று உயர உறுதி ஏற்போம்
நாளை நமதே நம்பிக்கை கொள்வோம்.
*கிராத்தூரான்*