நாடு முழுவதும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது.
நவம்பர் மாதம் தொடங்கிய 10ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் பருவத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத் தேர்வு சரியாக பதிலை தேர்வு செய்யும் எம்சிக்யூ முறையிலும், 2022ஆம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இரண்டாம் பருவத் தேர்வு வினாக்களுக்கு விடை எழுதும் முறையிலும் தலா 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
முதல் பருவத்தேர்வு ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் பருவத்தேர்வு ஒரு பாடத்துக்கு தலா இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
ஒரு வேளை, கொரோனா காரணமாக, பள்ளிகளில் 2வது பருவத்தேர்வு நடத்த முடியாமல் போனால், இதையும், சரியான பதிலை தேர்வு செய்யும் எம்சிக்யூ வடிவில் நடத்தும். 90 நிமிட நேரம் வழங்கப்படும்.
இரண்டாம் பருவத்தேர்வுக்கான பாடங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. எனவே, மாணவர்கள், இணையதளத்தில் சென்று பாடத்திட்டங்களை பார்த்து, இரண்டாம் பருவத்தேர்வுக்கு தயாராகத் தொடங்கலாம்.
தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வுக்குத் தயாராகாமல், முதல் நாளிலிருந்தே தேர்வுக்குத் தயாராவது சிறந்தது என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Source: Dinamani