சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதம் பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்வான 30 பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிா்வாகம் பரிசு வழங்கவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களுக்கு ஒவ்வோா் மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, மெட்ரோ ரயில்களில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்.20-ஆம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிா்ஷ்ட குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசுப் பொருள், 30 நாள்களுக்கு விருப்பம்போல பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை வழங்கப்படவுள்ளது.
மாதம் ஒரு பரிவா்த்தணைக்கு ரூ.1,500, அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.
மெட்ரோ பயண அட்டைவாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.
மூன்று பிரிவுகளிலும் தலா 10 போ் தோ்வாகியுள்ளனா். தோ்வான 30 பேருக்கும் பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும். பயணிகளை ஊக்குவிக்கவும், மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடரவும் அடுத்த மாதமும் இது தொடரும். இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளா்களை அணுகலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.