அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
தமிழ்நாட்டில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் 2022-2023 கல்வி ஆண்டில் 7,500 திறன் வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) ரூ.150 கோடியில் உருவாக்கப்படும். 10 லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.210 கோடி மதிப்பில் 2,713 நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
2022-2023-ம் கல்வி ஆண்டில் ரூ.100 கோடி மதிப்பில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்க 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சென்னையில் ரூ.7 கோடி மதிப்பில் சீர்மிகு பள்ளி அமைக்கப்படும்.
சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஒவ்வொரு ஆண்டும் 100 பேருக்கு விருதும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும்.
ரூ.25 கோடி செலவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் செயல்படுத்தப்படும். அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு, கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் ரோபோடிக் கற்றுக்கொள்ள எந்திரனியல் மன்றங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
மாணவர்களின் உடன் நலன் காக்க உடலியக்க நிபுணர்கள் மூலம் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும்.