மூக்குடைப்பட்டுப்போக
முட்டாள் இனமல்ல;
முரண்டு பிடிப்பது
குணமும் அல்ல;
முச்சந்தியில் நின்று முனகிட,
முடிவுரையும் இல்லை;
முன்னுரை எழுதினால்
முழுநிலவாய் தானிருக்கும்!
முடிவுரையோ முத்திரைப்பதித்திடும்
சூரியனே!
அதிகாரத்தைப் பயன்படுத்தி,
ஆணவப்போதையில் நிலைநிறுத்திட,
இங்குமங்கும் சுற்றி ஆடிடவும் இல்லை;
புள்ளி வைத்தால் கோலமிடும் ;
ஞாலமும்
வியந்துப் போற்றிடும்
அறிவின் ஞானிகள்
ஒன்றாகும் இடமே!
வெட்டித்தனமாகச் சென்றுவரவில்லை;
ஆணிவேர் ஆழமாகிட,
அறிவென்னும் நீரையூற்றி ஆழ்ந்த சிந்தனையை விதைத்திடும் தீரர்களின்
உழைப்பு உள்ள இடமே!
வருவதும் போவதும்
விளையாடுவதும் விதண்டாவாதம் செய்யும் இடமுமில்லை;
விண்ணும் மண்ணும் வியந்துபோற்ற
வீரர்களையும் தீரர்களையும் உருவாக்கும் அறிவுக் களஞ்சியமே!
நிறைகளே கண்களுக்குத் தெரியாது;
குறைகளைக் கூறுவதே
வாடிக்கையாக வேடிக்கையாக வசதியாக வாய்ப்பை பயன்படுத்துகிறேன் என அறிவு ஜீவியாக,
ஆனந்த சங்கமாகுமிடத்தில்
அர்ச்சனைப் பூக்களைத் தெளிப்பது மட்டுமே சுகந்தானோ?
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை மறந்து ஏடாகூடமாக
ஏவுகணையாக அக்னிச் சொற்களை வீசிச் செல்வது மனதிற்கு இதம்தானோ?
அடிமைத்தனமாகிட அயர்ந்து உறங்கும் கோழைகளல்ல;
அடிமாட்டு விலைக்கென
அலைக்கழிக்கும் சொற்களை அள்ளித் தெறித்திட அறிவில்
ஏழைகளும் அல்ல;
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுமென
எக்காலமும் அறிவுப்பசியினைப் போக்கிட அயராது உழைத்திடும் வேந்தர்களே!
அறிவுரையை அகம் வருந்தாது கூறினால்
புத்திசாலித்தனமே!
அறவுரை கூறுகிறேனென
அற்பத்தனமாய் கூறுவது அரைவேக்காட்டுத்தனமே!
எல்லாம் அறிந்த முனிவனைப்போல
முன்னுரை எழுதினால்,
ஒன்றுமே அறியாதவன் என எண்ணினால்,
அகிலத்தில் இங்கு யாரும் மடையனும் இல்லை.
தட்டுத்தடுமாறி
தடம்மாறியும் அறிவைப்போதிக்கும்
பணிக்கு வரவுமில்லை;
அகமும்முகமும் மலர
அறிவுப்பசி வளரவளர
ஊற்றெடுக்கும் நீரோடையாய் உத்வேகமாய் பயணித்துவந்து,
பன்முகத்திறன்களையும் பயன்படுத்தித் தந்து
பகுத்தறிவினை பகலவனைப்போல
ஔிரச் செய்யும் உயர்ந்த பணியென
தேடிவந்தோம்!
இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்