போதை உனக்கு பாதை இல்லை!
........போனால் உனக்கு வருமே தொல்லை!
போதை நாடி நீயும் போனால்
.........போகும் பாழாய் உந்தன் வாழ்வு!
சாதனை பண்ணும் வயதில் நீயும்
..............சாய லாமா போதையின் பக்கம்?
தீதாம் போதையைத் தேடி நீயும்
........திண்ணிய உடலை அழித்து விடாதே!
(1)
மதுவைக் குடித்தால் மானம் அழியும்!
.........மதுவால் மதியும் மயங்கிப் போகும்!
ததும்பும் இளமைப் பருவந் தன்னில்
..........தவறியும் புகைக்கப் பழகி விடாதே!
புதுமை என்றே எண்ணி நீயும்
.........புகைத்தால் வருமே புற்று நோயும்!
முதுமை வருமுன் மரணம் வரலாம்!
.........முழுதாய்ப் போதையின் பக்கம் சென்றால்!
(2)
கஞ்சா அடிக்க கற்றுக் கொண்டால்
.........கருகிப் போகும் உந்தன் வாழ்வு!
நஞ்சாம் போதை நாளும் தின்றால்
..........நரம்பு தளர்ந்தே நடுக்கம் கொள்வாய்!
அஞ்சா நெஞ்சாய் ஆளுமை கொண்டே
..........அணையாய்த் தடுப்பாய் போதையை எதிர்த்தே!
அஞ்சி டாமல் அனைவரும் இணைந்தே
.........அடைப்போம் போதையின் பாதையை விரைந்தே!
(3)
த.ஏமாவதி
கோளூர்