ஆயிரம் காலத்துப் பயிரென்ற திருமணம்
பந்தத்தை, சொந்தத்தை, வாரிசை அளித்தது.
அன்பும், பண்பும், பாசமும், நேசமும்
அனைத்துமே அதற்குள்ளே அடக்கமே என்றது.
கண்களின் அசைவுகள் மனங்களின் இசைவுகள்
நன்றாகப் புரிந்திட வருடங்கள் பிடித்தது.
அறிந்ததும் உணர்ந்ததும் ஈருடல் ஓருயிர்
என்கின்ற தத்துவம் உள்ளத்தில் பதிந்தது.
இணையாக, துணையாக இருப்பதே தொடர்வதே
காவியக் காதலின் கருவென்று புரிந்தது.
இனிமையும் பெருமையும் நினைவிலும் நிஜத்திலும்
ஒன்றாதல் என்பதும் நன்றாகத் தெரிந்தது.
பெரியோர்கள் காட்டிடும் வழியினில் இளையோர்கள்
செல்வதே பாரதக் கலாச்சாரம் சொல்வது.
அன்றல்ல இன்றல்ல என்றுமே நிலைத்திடும்
பரம்பரை சான்றது பண்பாடு என்பது.
கிராத்தூரான்