தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
பேரவை கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஹேமலதா பேசினார். வட்ட செயலாளர் இளவரசன் வேலை அறிக்கை வாசித்தார். இதில் மாநில செயலாளர் கோதண்டபாணி கலந்து கொண்டு பேசினார்.பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அரசு ஊழியர் சங்க 14-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
காலமுறை ஊதியம்
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறைகளை முற்றிலுமாக அகற்றி அனைவரும் காலமுறை ஊதியத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள அரசாணை 151, 152 மற்றும் 115 இளைஞர்களின் வேலை வாய்ப்பை முற்றிலுமாக பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இதனை அரசு ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்இதில், சர்வேயர் அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் தர்மராஜ், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தென்னரசு, மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட செயலாளர் கணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.