. -->

Now Online

FLASH NEWS


Tuesday 28 March 2023

அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று (மார்ச் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பணிகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பேரூராட்சி, மருத்துவத்துறை உட்பட பல துறைகளில் அவுட்சோர்ஸிங் முறையில் பணியிடம் நிரப்புவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த தேர்தலின் போது தி.மு.க., இவற்றை நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிட்டதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சமீபத்திய பட்ஜெட்டிலும் அரசு ஊழியர்களுக்கென எதுவும் சொல்லவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். இதனால் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக இன்று ஒருநாள் மாநில அளவில் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதில் 60க்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்கள் ஈடுபடுவதால் பணி பாதிக்கும்.

அவர்கள் கூறுகையில், ”தமிழ்நாடு அனைத்து சங்கங்களின் போராட்டக்குழு முடிவின்படி கோரிக்கைகளுக்காக பலகட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். முன்பு 12.5 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்த நிலையில், தற்போது 8 லட்சம் பேர் உள்ளனர். காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை நிரப்புவோம் என தேர்தல் வாக்குறுதியாக கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் 1754 பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம் என மாநில பிரதிநிதித்துவ மாநாட்டில் முதல்வர் உறுதியளித்து இருந்தார். அதுவும் நடக்கவில்லை. எனவே இந்த போராட்டம் தவிர்க்க முடியாதது” என்றனர்.

அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் கூறுகையில், ”இன்றைய போராட்டத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தீர்வு கிடைக்காவிடில், ஏப்ரல் 19ல் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.