பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் மிகப்பெரிய தவறை இணையத்தில் செய்து வருகிறார்கள். இது அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும் என்ற புரிதல் பெற்றோர்களுக்கு இருப்பதில்லை.
Sharenting என்பது பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் சார்ந்த விவரங்களை இணையத்தில் பகிர்வதாகும். இதுகுறித்த விவாதங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டாலும் இதைப் பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. AI தொழில்நுட்பங்களான DeepFake போன்றவற்றால் இது மேலும் மோசமாக மாறும் என்கின்றனர்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தையை பற்றி விளையாட்டாக இணையத்தில் பகிரும் விஷயங்கள், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்புள்ளது. அவர்களின் தரவுகள் இணையத்தில் பகிரப்பட்டு, ஹேக்கிங், முகமாற்று பிரச்சினைகள் மற்றும் மோசமான பிரைவசி சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
நிபுணர்களின் கணிப்புப்படி, 2030க்குள் ஏற்படும் பெரும்பாலான அடையாளத் திருட்டு புகார்கள், இப்படி கவனக்குறைவாக தங்களின் விவரங்களைப் பகிர்வது மூலமாகவே நடக்கும் என்கின்றனர். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது எடுக்கும் புகைப்படங்கள், குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும்போது எடுக்கும் காணொளிகளை பெற்றோர்கள் பெருமைப்படும் விதமாக இணையத்தில் பதிவிடுகின்றனர். ஆனால் இது அடையாளத்தை திருடும் மோசடிக்காரர்களுக்கு சாதகமான ஒன்றாக மாறிவிடும்.
ஒருவேளை நீங்கள் இணையத்தில் விளையாட்டாக உங்களின் குழந்தையின் புகைப்படத்தை பகிரும்போது, அதை ஒருவர் எடுத்து DeepFake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறொரு நபரின் அடையாளங்களோடு பொருத்தி இணையத்தில் உலாவவிட்டால் என்ன ஆகும்? இப்போது பிரபலங்களும், நடிகர் நடிகைகளும் இத்தகைய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்!
ஒருவேளை எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகளை யாராவது பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பில் இப்படி செய்வதற்கு நீங்களே இடம் ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள். உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு காணொளியை எடுத்து வைத்துக்கொண்டு, அதில் பலருடைய முகத்தை மாற்றி வெவ்வேறு தளங்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறுகிறது.
இத்தகைய இணைய மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முடிந்தவரை அவர்கள் சார்ந்த எந்த காணொளியையும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர வேண்டாம். பெரியவர்களின் பிரைவசி எந்த அளவுக்கு இணையத்தில் முக்கியமோ, அதேபோல குழந்தைகளின் பிரைவசியும் மிக முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.