உலக அளவில் கால் அகற்று அறுவைசிகிச்சை அதிக அளவில் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது சர்க்கரை நோய். இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவதற்கும், அந்தப் புண்கள் ஆறாமல் விரல்கள் அழுகி இறுதியில் அந்த விரல்கள் வெட்டப்படுவதற்கும் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடற்று இருப்பது ஒரு காரணம்.
*ஆறாதபுண் யாருக்கெல்லாம் வரும்...*
சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் பாதிப்புகளில் மிகவும் ஆபத்தானது எளிதில் ஆறாமல் இருக்கும் புண்.
சாதாரணமாக ஒருவருக்கு புண் வந்தால், மூன்று வாரத்துக்குள் ஆறிவிடும். மூன்று வாரங்களையும் தாண்டி புண் ஆறாமல் இருந்தால், அது ஆறாத புண். அந்த ஆறாத புண்ணுக்கான காரணிகள் இரத்தக்குழாய் பாதிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பராமரிப்பின்மை, சர்க்கரைநோய்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் தொடர்ந்து சர்க்கரை அளவு அதிகரித்து இருக்கும் போது உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் ஏற்பட்டால் அவை ஆறுவது சிரமமாகும்.
*என்ன காரணம்...*
கால்கள் ஏன் அழுகுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் விளங்க வேண்டும்.
* மனிதர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும், வயிற்றில் ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயணப்படுகிறது. ஒருவர் உட்கொள்வது நல்ல பொருளாக இருந்தாலும் அல்லது கெட்ட பொருளாக இருந்தாலும்; அது நிச்சயமாக இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தம் மூலமாக அந்தப் பொருள் உடலின் ஒவ்வொரு செல்களையும் சென்றடையும்.
* சர்க்கரை நோயாளிகள் அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அந்த மாத்திரைகளை உடலால் முழுமையாக ஜீரணிக்க முடியாது. உடலால் ஜீரணிக்க மற்றும் வெளியேற்ற முடியாத இரசாயனங்கள் இரத்தத்தில் கலந்து உடலில் சுற்றிக் கொண்டே இருக்கும்.
* இரத்தத்தில் பயணம் செய்யும் அந்த இரசாயனங்கள் உடலில் எந்த பாகத்தில் தேங்குகிறதோ; அந்த பாகத்தை கெடுத்து அந்த இடம் அழுகவும் புண்கள் உருவாகவும் காரணமாகவும் வாய்ப்பு இருக்கிறது.
-> உதாரணமாக இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை,
X இரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் "ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம்,
X இதய இரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்பு,
X சிறுநீரக இரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது.
X இதுதவிர, கண்ணில் விழித்திரை பாதிப்பு, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது.
*கால்களை அதிகம் பாதிக்க என்ன காரணம்...*
சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக கால்களில் புண்கள் உண்டாவதற்கும், கால்கள் அழுகுவதற்கும் காரணம் புவியீர்ப்பு சக்தி. என்ன? ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் அதுதான் உண்மை.
இன்றைய மக்கள் பெரும்பாலான நேரங்களில் கால்களை தொங்க வைத்துக்கொண்டு நாற்காலிகளில் அமர்கிறார்கள். கால்களை மடக்கி அமர்வதும், தரையில் சம்மணம் போட்டு அமர்வதும் அரிதாகி விட்டது. சாப்பிடும் போதும், படம் பார்க்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும், அலுவலக வேலைகளை செய்யும் போதும், எந்த நேரத்திலும் பெரும்பாலும் கால்களை கீழே தொங்க விட்டால் போல் அமர்கிறார்கள்.
புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் சுற்றும் இரத்தம் கால்களை அடையும் போது மீண்டும் மேலே சுழன்று வர சிரமப்படுகிறது. இரத்தம் மூலமாக கால்களுக்கு சென்ற இரசாயனங்கள், மீண்டும் மேலே ஏறாமல் கால்களிலேயே தேங்குகின்றன. வெகு நாட்கள் கால்களில் சேர்ந்த இரசாயனங்கள், கால்களிலேயே தேங்கி கால்களில் வலி உருவாகவும், கால்கள் வீங்கவும், கால் நரம்புகள் இழுத்துக் கொள்ளவும், கால்கள் தளர்ந்து போகவும், கால்களில் புண்கள் உருவாகவும் ஒரு சிலருக்கு கால் விரல்கள் அழுகிப்போகவும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தொந்தரவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எந்த இரசாயன மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் உருவாகலாம்.
*உதாரணங்கள்...*
ஒரு குளத்தையோ, ஒரு ஆற்றையோ உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். குளத்தில் சேரும் கழிவுகள் முழுவதும் குளத்தின் கீழே சேருகிறது அல்லவா?. ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தாலும், ஆற்றில் சேறுகள் முழுவதும் ஆற்றின் கீழே உறைவதில்லையா?
ஆற்றில், குளத்தில், கேணியில், கடலில் எதை போட்டாலும் அவை அடிக்கு சென்று விடுவதில்லையா? அவ்வளவு ஏன் சமைத்த குழம்பும், இரசமும், பானங்களும் கூட சிறிது நேரத்தில் மண்டிகளாக பாத்திரத்தின் அடியில் சேருகிறது அல்லவா? இவை தான் ஈர்ப்பு விசையின் விளைவுகள். இதே தான் நம் உடலின் உள்ளேயும் நடக்கிறது.
*சர்க்கரை நோயாளிகளின் பாதப் பிரச்சனை எப்படி ஏற்படுகிறது...*
√ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்து, நரம்புகள் பாதிப்படையும்.
√ பாதத்தைப் பொறுத்தவரை எலும்புப் பகுதியில் பாதிப்பு, காலில் சுளுக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும், வீக்கம் இருக்கும் உணர்ச்சி இல்லாததால் வலி தெரியாது.
√ பாதிப்புகள் எதுவும் தெரியாத நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.
*ஏன் பாத பாதிப்பு தெரிவதில்லை...*
* காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. காலப்போக்கில் பாதிப்படைந்த பகுதியில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காமல் விடுவதால் நரம்பில் பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும். காலை ஊன்றமுடியாமல் அவதிப்பட நேரிடும்.
* கூடுதலாக கால்களில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் போதுமான இரத்த ஓட்டம் இருப்பது இல்லை. மேலும், நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணர்ச்சிகள் தெரியாமல் போகிறது. இதனால், காயம் ஏற்பட்டால் நமக்கு தெரிவதும் இல்லை, எளிதில் ஆறுவதும் இல்லை.
* சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் கிருமிகள் வளர கொண்டாட்டமான சூழல் ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளில் சராசரியாக 90 சதவிகிதம் பேர் காலில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 10 சதவிகிதத்தினருக்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது; 4 சதவிகிதத்தினருக்கு காலையே அகற்றும் நிலை ஏற்படுகிறது.
* சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் ஏற்பட்டால் அவை ஆறுவது சிரமமாகும். விரல்களுக்கிடையில் சேற்றுப்புண் வந்தாலும் தெரிவதில்லை. விரல்களையோ காலையோ இழக்க நேரிடலாம். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.
* கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தங்களின் தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
*பாதம் பராமரிக்க...*
1. பாதங்களில் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படாதவாறு, பாதுகாப்பாக நடக்க வேண்டும். எங்கேயும் எப்போதும் காலணி அணிந்து செல்ல வேண்டும்.
2. பாதங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். காலில் பார்க்க முடியாத இடங்களை கண்ணாடி துணைக் கொண்டு பார்க்கலாம் அல்லது வீட்டிலிருப்பவர்களைப் பார்க்கச் சொல்லி காயம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
3. பாதங்களில் தினமும் மாய்ஸ்சரைசர் தடவிக்கொள்ள வேண்டும்.
4. காலுக்கு பொருத்தமான காலணிகளை அணிவது அவசியம்.
5. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உணவு, மருந்து போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. காயம் ஏற்பட்டிருந்தால் சுய மருத்துவம் தவிர்த்து உடனே சிகிச்சை பெற வேண்டும்.
*சிகிச்சைகள்...*
புண் ஏற்படும்போது, சர்க்கரையின் அளவு 400 mg/dl-க்கும் அதிகமாக இருக்கும். பொதுவாக 200 mg/dl-க்குள் சர்க்கரையின் அளவு இருப்பதுதான் ஆரோக்கியமானது.
ஆறாத புண் ஏற்பட்டுள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு, முதலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு அறுவை சிகிச்சை மூலம் காயத்தின் உள்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் திசுக்களை வெளியேற்றிவிட்டு, கொலாஜன் புரதம் செலுத்தப்பட்டு புண்கள் ஆற சிகிச்சை அளிக்கப்படும்.
* கால்களை அதிகமாக தொங்க வைத்துக்கொண்டு அமராமல், முடிந்தவரையில் கால்களை மடித்து அமர வேண்டும். இவ்வாறு செய்தால் கால்களில் புண்கள் உருவாகாது. ஒரு வேளை தற்போது புண்கள் இருந்தாலும் அவை விரைவாக ஆறிவிடும்.