ஆனால் மிக அபூர்வமாகவே வார நாட்களில் பொங்கல் பண்டிகை முழுமையாக வரும். அந்த வகையில் 2025 பொங்கல் வருவதால், கூடுதல் லீவு கிடைக்க ஜனவரி 17-ந்தேதியை அரசு விடுமுறையாக விடவேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை வைத்திருக்கிறது.
பள்ளிக்குழந்தைகளுக்கு அரையாண்டு விடுமுறையை போல் இன்னொரு முறை மிகப்பெரிய அளவில் விடுமுறை வரப்போகிறது. 2025ம் ஆண்டு இன்னும் 3 நாளில் பிறக்க போகிறது. 2024 லீப் வருடம் என்பதால் இந்த முறை பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி வருகிறது. ஜனவரி 13ம் தேதி திங்கள்கிழமை போகி பண்டிகையாகும். போகி பண்டிகையை பொறுத்தவரை விடுமுறை என்றாலும் இப்போது வரை ஒவ்வொரு ஆண்டும் அரசு தனிப்பட்ட முறையில் விடுமுறை அறிவித்து வருகிறது.
அதிகாரப்பூர்வ விடுமுறை என்றால் பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 16-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் தான் அரசு விடுமுறை நாட்களாகும். ஆக மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிப்பது குறித்து இன்னும் தமிழக அரசு அறிவிக்கவில்லை..
வழக்கம் போல் அரசு இந்தாண்டும் விடுமுறை அறிவித்தால், சனி, ஞாயிறு, திங்கள் , செவ்வாய், புதன், வியாழன் என ஆறு நாட்கள் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்கும். அதேநேரம் வரும் ஜனவரி 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வேலை நாளாக அமைந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து வரும் 18 மற்றும் 19-ந்தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் விடுமுறை நாட்களாகும். எனவே ஜனவரி 17ம் விடுமுறை அறிவித்தால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், 17-ந்தேதி ஒரு நாளை மட்டும் விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால், வெளியூர்களுக்குச் சென்று பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கூடுதல் விடுமுறை (14-ந்தேதியில் இருந்து 19-ந்தேதிவரை 6 நாட்கள்) கிடைப்பதால் மகிழ்ச்சியடைவார்கள். எனவே இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17-ந்தேதியை விடுமுறை நாளாக அரசு அறிவிக்கும்பட்சத்தில், அந்த வாரத்தில் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மட்டுமே வேலை நாளாக உள்ளது. அந்த நாளை மட்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பாக எடுத்துக் கொண்டால், 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதிவரை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். பள்ளி மாணவர்களை பொறுத்தவரை அரசு ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவித்தால் கண்டிப்பாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் அரசின் அறிவிப்பாக ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
source: oneindia.com