திருக்குறள்:
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
விளக்க உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
பழமொழி :
Dont wait for the right time, make it.
சரியான நேரத்திற்காக காத்திருக்காதே, உருவாக்கு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.
2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்குத் தகுதியான தன்மைகளின் முதன்மையான ஆக்கக் கூறுகள் நல்ல தன்மை, உண்மை ,நல்லறிவு ஆகியவை ஆகும்- ஜோசப் அடிசன்
பொது அறிவு :
01.ஆழ்கடலில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன்களை கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?
ஃபிஷ் பைண்டர் அல்லது
எக்கோ சவுண்டர்
Fish finder or Echo sounder
02.உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் எது?
அட்டகாமா பாலைவனம்
தென் அமெரிக்கா- சிலி
Atacama Desert
South America- Chile
English words :
collaboration – the action of working with someone to produce something. ஒத்துழைப்பு அல்லது உடனுழைப்பு
அறிவியல் களஞ்சியம் :
ஒருவனின் மூளையைச் சுழுத்தி நிலை போன்ற செயற்கையான ஆழ்ந்த அறிநிலைக்குக் கொண்டு வரும் ஒரு கலை தரவுதுயில் ஆகும் (Hypnotism). அந்நிலையில் தரவு துயிலாழ்த்துவோன் (Hypnotist) அவனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கக்கூடும். ஆழ்மனப்பரப்பை ஆய்வு செய்து நோயாளியின் அடி மனதில் புதைபட்டு மறைந்து கிடக்கும் கவலைகளையும் அக அழுத்தங்களையும் விடுவிக்கும் ஒரு நெறியே இது.
நீதிக்கதை
புத்திசாலி அம்மா
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான்.
பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன்.
முன்பு நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.
இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது.
நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது.
இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.
அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டியி ருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய். எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.
புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது.
வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள்.
நீதி :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.
இன்றைய செய்திகள்
25.08.2025
⭐காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
⭐ஜம்மு காஷ்மீருக்கு தொடரும் கனமழை எச்சரிக்கை-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
⭐அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀கேரளா கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
இன்று நடந்த போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.
🏀உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஓட்டப் பந்தய வீரர்: அனிமேஷ் குஜுர் சாதனை.
🏀கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி வென்று அசத்தினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா.
Today's Headlines
⭐School Education Department announces quarterly exam dates
⭐Jammu and Kashmir continue to receive heavy rain warnings, and the death toll in the landslide rises to 30
⭐50 percent tariff on Indian goods in the US came into effect.
SPORTS NEWS.
🏀Sanju Samson plays for Kochi Blue Tigers in the Kerala Cricket League. In the match played today, he scored 89 runs in 46 balls, including 9 sixes and 4 fours.
🏀Animesh Kujur becomes the first Indian runner to qualify for the World Athletics Championships.
🏀Minister T.R.P. Raja's daughter Nila Raja, won silver for India at the Asian Shooting Championship held in Kazakhstan.