. -->

Now Online

FLASH NEWS


Monday 29 April 2019

'டெட்' தேர்வு எழுதாதவர்களுக்கு சம்பளம் நிறுத்துவதா? ஆசிரியர்கள் சங்கம் கேள்வி

ஆசிரியர் தகுதித் தேர்வு என்னும் 'டெட்' தேர்வு எழுதி முடிக்காத ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக வந்த செய்தியை அடுத்து, அதை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு அம்சமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே. இந்த சட்டம் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய பட்டியல் தயார் செய்து சுமார் 20 ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அதில் மீதம் உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

அதனால் அந்த தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பணியில் சேர்ந்வர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்களின் சம்பளம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் அதிருப்தியும் மனஉளைச்சலும் அடைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர். 

இது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2011ம் ஆண்டில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு 5 ஆண்டு காலத்துக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு என்னும் டெட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 

தேர்வு எழுதுவதற்கு 10 வாய்ப்புகள் மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியுள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்றுகூறி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். குறிப்பாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர்கள் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக சம்பளத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.