. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 May 2019

‘நீட்’ தேர்வு விடைகள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு: ஜூன் 5-ம் தேதி தேர்வு முடிவு



‘நீட்’ தேர்வுக்கான விடைகள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - ‘நீட்’) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் 154 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டமையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 14 நகரங்களில் 188 மையங்களில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. ‘நீட்’ தேர்வில் கடைபிடிக்கப் படும் நிபந்தனைகள், கட்டுப்பாடு கள், கெடுபிடி சோதனைகள் குறித்த விழிப்புணர்வு இருந்ததால், மாணவ, மாணவிகள் ஓரளவு அதற்கு தயாராகவே வந்தனர். வழக்கத்துக்கு மாறாக, பிற்பகலில் தேர்வு நடத்தப்பட்டது. இது, மாணவர்கள் தேர்வு மையங்களை கண்டுபிடித்து வந்துசேர வசதியாக இருந்தது. தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்பதால், நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே மாணவ, மாணவிகள் பதில் அளித்தனர். தேர்வு எளிதாக இருந்ததாக அவர்கள் கூறினர். ‘நீட்’ தேர்வு விடைகள் பட்டியல் (ஆன்சர் - கீ) ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. விடைகள் குறித்து ஆட்சேபம் இருந்தால் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.1,000 கட்டணம். இது திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது. ‘நீட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது.