. -->

Now Online

FLASH NEWS


Saturday 18 May 2019

92 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல்?

இந்த ஆண்டு 92 இன்ஜினியரிங் கல்லூரிகள் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுமா அல்லது மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கப்பட்டதன் 225ம் ஆண்டு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புகைப்பட கண்காட்சி நடந்தது. ஆண்டு விழாவை மரக்கன்று நட்டு துணை வேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சர் விதிகளின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வேளாண் மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில், கல்லூரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பின் மீது அக்கறை செலுத்தினால் இதுபோன்ற பிரச்னை எழாது. கல்லூரியை தேர்வு செய்வது மாணவர்களின் விருப்பம்.

92 கல்லூரிகள் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்காதது தொடர்பாக கல்லூரிகள் பட்டியலை வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட கல்லூரிகள் செயல்படுவதில் பிரச்னை ஏற்படக்கூடாது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே 92 கல்லூரிகளில் 300 பாடப்பிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடவில்லை. அந்த கல்லூரிகளின் நிர்வாகங்களிடம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளோம். இவ்வாறு சூரப்பா கூறினார். இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு (அபிலியேஷன்) பெற்று செயல்படுவதற்காக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அபிலியேஷன் பெறுவதற்கு விண்ணப்பித்தல் மே 15ம் தேதி முடிந்தது. இந்த ஆண்டு 92 இன்ஜினியரிங் கல்லூரிகள் முதலாமாண்டு அபிலியேஷனுக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் இந்த கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுமா அல்லது மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததா, இல்லையா?
தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்த துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் தனக்கு அரசின் அழுத்தம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, பேட்டி ஒன்றின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அரசிடமிருந்து தனிப்பட்ட அழுத்தம் எதுவும் கொடுக்கப்படவில்லை என அவர் பதிலளித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக துணை வேந்தர் சூரப்பாவிடம் நேற்று கேள்வி எழுப்பியபோது, சமூகத்தில், ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் எனக்கு எந்தவிதமான அழுத்தமும் அரசிடமிருந்து வரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது சரிதான். எனக்கு தேவையான ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது என்றார்.