. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 May 2019

ரயில் தாமதம்: நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடக மாணவர்களுக்கு மறுவாய்ப்பு

ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். 
ஹுப்பள்ளியில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட ஹம்பி விரைவு ரயிலில் வடகர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக பயணித்தனர். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு பெங்களூரு வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், 8 மணி நேரம் தாமதமாக நண்பகல் 2.37 மணிக்கு வந்து சேர்ந்தது. 
ரயில் தாமதமாக வந்ததால், புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருந்த தேர்வு மையங்களுக்குச் செல்லமுடியாமல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியவில்லை.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 
தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமய்யா சுட்டுரையில் பதிவிட்டதுடன், பிரதமர் நரேந்திர மோடியின் சுட்டுரைப் பக்கத்திலும் அதனை இணைத்திருந்தார். இந்நிலையில், கர்நாடக மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடகத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் குமாரசாமியும் இது தொடர்பாக பிரகாஷ் ஜாவடேகருக்கு சுட்டுரை மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். பானி புயல் காரணமாக ஒடிஸாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, மே 20-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.