. -->

Now Online

FLASH NEWS


Friday 3 May 2019

பள்ளிகளை இணைக்க கூடாது: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!


மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி பள்ளிகளை இணைக்க கூடாது என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர் தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலூரில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கூட்டம் மாவட்டத் தலைவர் முகமது அஜ்மல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் தாஸ் கலந்து கொண்டார். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுகளும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுசெயலாளர் இரா .தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்; தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை கடந்த 10 ஆண்டுகளில் 20 முறை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் 10 ஆண்டுகளில் இரண்டே தகுதி தேர்வை மட்டும் நடத்தியிருக்கிறது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறி மாநிலம் முழுவதும் 1500 ஆசிரியர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்யவுள்ளது கண்டிக்கதக்கது. அத்துடன் அவர்களுக்கு சம்பளத்தையும் நிறுத்தி வைத்தது வேதனைக்குரியது. தற்போது பல ஆசிரியர்கள் இதில் பாதிக்கப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு தானாக முன் வந்து நீதிமன்றத்தில் சொல்லி இந்த 1500 ஆசிரியர்களுக்கு வாய்ப்பை வழங்க முன் வர வேண்டும். இவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள காரணத்தால் இவர்களுக்கு அரசு தனியாக ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பொது கூட்டங்களை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு வழங்க வேண்டிய 3 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை என காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளனர். அதனை உடனடியாக வழங்க அரசு முன் வரவேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் எண்ணிகையை காரணம் காட்டி தமிழக அரசு பள்ளிகளை இணைப்பு என்ற பெயரில் பள்ளிகளை இணைக்க கூடாது. இரண்டு மாணவர்கள் இருந்தாலும் அதே பள்ளியில் பயில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சமூக நலனுடன் நடந்துகொள்ள வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.

தற்போது கோடை விடுமுறை பள்ளிகளுக்கு என்றாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று மாணவர் சேர்க்கையை உயர்த்தி வருகின்றனர். எனவே ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறினார்.