. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 June 2019

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ஊதியம் 'கட்': கண்ணீருடன் பள்ளிக்கு சென்றனர்

தமிழகத்தில் கோடை விடுமுறையால், 12 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒரு மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், சிறப்பாசிரியர்கள் பலர், பள்ளி திறந்த முதல் நாளிலேயே கண்ணீரும், கவலையுமாக பணிக்கு சென்று வந்தனர். அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்கள், இயற்பியல், வேதியியல், பொருளியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு, நிரந்தர ஊதியத்தில் ஆசிரியர் உள்ளனர். ஓவியம், தையல், இசை, நெசவு, கைவினை கலை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட செய்முறை கல்வி பாடங்களுக்கு, பெரும்பாலும் பகுதிநேர ஆசிரியர்களே உள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு இந்த சிறப்பு பாடங்களுக்கு, 16,549 பேர் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள், வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், பல பணிகளுக்கு இவர்களை கல்வித் துறை பயன்படுத்தி வருகிறது. இவர்களுக்கு, தற்போது மாதம், ரூ.7,700 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது; வேறு எந்த சலுகைகளும் இல்லை. இதனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து விலகி விட்டனர். தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, கோடை விடுமுறை மாதமான மே மாத ஊதியம் கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து, பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்த ஆண்டு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. 

இதனால், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பலர், கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, கண்ணீருடன் பணிக்கு வந்தனர். ஊதியம் வருமா என்ற கவலையுடன் திரும்பினர். இதுகுறித்து, சிறப்பு ஆசிரியர்கள் கூறுகையில், 'எங்களுக்கு கோடை விடுமுறையில் ஊதியம் வழங்கப்படாததால் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவில் பலமுறை மனு அளித்துள்ளோம். இந்த ஆண்டாவது, மே மாத ஊதியத்தை வழங்கினால் எங்களது கவலை தீரும்' என்றனர்.