. -->

Now Online

FLASH NEWS


Friday 7 June 2019

"சனி"க்கிழமை பள்ளி உண்டா இல்லையா? ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் !!! வாட்ஸ் அப் வைரல் பதிவு



அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே..  உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.  இந்தக் கல்வியாண்டில் இதை ஆலோசனையை பின்பற்ற வேண்டுகிறோம். வேறொன்றும் இல்லை. வெள்ளிக்கிழமை விடிந்தவுடன் அலைபேசியில், வாட்ஸ் அப்பில், முகநூலில் சனிக்கிழமை பள்ளி உண்டா இல்லையா என்று களமாட தொடங்கவேண்டாம்.

சனி , ஞாயிறு எப்போதும் நமது பள்ளிகளுக்கு விடுமுறை தான்.  அப்படியே சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது அலுவலர்கள் தான். நாம் இல்லை.

*என்ன நடக்கிறது?*

வெள்ளிக்கிழமை காலையில் சில தலைமை ஆசிரியர்கள் இயக்கப்பொறுப்பாளரை தொடர்பு  கொண்டு சனிக்கிழமை பள்ளி உண்டா இல்லையா என்று கேட்கிறார்கள்.  அவர் BEO வை தொடர்பு  கொண்டு கேட்கிறார். BEO  உடனே DEOவை தொடர்பு  கொண்டு கேட்கிறார்.DEO  உடனே CEOவை தொடர்பு  கொண்டு கேட்கிறார்.CEO  உடனே இயக்குனரை தொடர்பு  கொண்டு கேட்கிறார்.  இயக்குனர் உடனே இவ்வளவு பேர் கேட்கிறார்கள் ஏன் வம்பு வேலைநாள் என்று அறிவித்து விடுவோம் என்று அறிவித்து விடுகிறார்.  கடந்த ஆண்டு முழுவதும் இது தான் நடந்தது.  கல்வித்துறையில் வெளியாகும் பெரும்பாலான செயல்முறைகளுக்கான ஆணிவேர் ஆசிரியர்கள் இணையத்தில் நடத்தும் ஹேஷ்யமான உரையாடல்களில் இருந்தே தொடங்குகிறது ‌

*என்ன செய்யலாம்?*

மிக சுலபம். வெள்ளிக்கிழமை 3.45 மணி வரை பொறுமையாக இருங்கள். பாடம் நடத்துங்கள். 3.45 க்குள் உங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாகவோ வாட்ஸ் அப்பிலோ தகவல் தெரிவிக்க வேண்டியது அலுவலர் கடமை.  3.45க்கு உங்கள் அலைபேசியில் பள்ளி உண்டு என்று தகவல் இருந்தால் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புங்கள். தகவல் இல்லையெனில் விடுமுறை அறிவித்துவிடுங்கள். சனிக்கிழமை விடுமுறை என தலைமை ஆசிரியர் அறிவிப்பதால் ஒன்றும் தலை போய்விடாது. சத்துணவு அமைப்பாளரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு உங்களை தொடர்பு  கொண்டு மறுநாள் சனிக்கிழமை பள்ளி உண்டா என கேட்க பழக்கப்படுத்துங்கள் .

வேலைகளை சுலபமாக கையாளுங்கள். மகிழ்ச்சியாக பாடம் கற்பியுங்கள்.

மேலே சொன்ன தகவல் ஆசிரியர் நலனுக்காக..


வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பூடான் நாட்டில்.  ஒரு மாவட்டத்திற்கு ஒரே ஒரு கல்வி அலுவலர் மட்டுமே.  ஆனால்  அந்த சிறிய நாட்டிலேயே அங்கு பள்ளி திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு திட்டமிடல் கூட்டம் நடைபெறும்.  எப்பொழுது பருவத்தேர்வு? என்ன தேர்வு கால அட்டவணை? எப்பொழுது பருவத்தேர்வு விடுமுறை ? எப்பொழுது ஆண்டு விழா ?எப்பொழுது விளையாட்டு விழா? எந்தந்த சனிக்கிழமை விடுமுறை விடுவது? எப்பொழுது ஆண்டு தேர்வு,  எத்தனை நாள் ஆண்டு  தேர்வு விடுமுறை , எப்பொழுது மீண்டும் அடுத்த ஆண்டு பள்ளி திறப்பது ? உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஆசிரியர்களுடன் ஆலோசித்து திட்டமிடப்படும்.  திட்டமிட்டு பள்ளி தொடங்கிய பிறகு அந்த அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது. தேசிய துக்கம் ,பெரிய இயற்கை இடர்பாடுகள் மட்டுமே லேசான மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது இன்னமும் சிறப்பாக செயல்படுவார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் வளர்ச்சியடைந்த நம் மாநில கல்வித்துறையில் கல்வி ஆண்டு நாட்காட்டி உண்டு. ஆனால் அதை பின்பற்ற மாட்டார்கள். பொதுத் தேர்வைத்தவிர மற்ற பருவத் தேர்வுகளுக்கு கால அட்டவணைகள் முந்தைய நாள் வரை முடிவு செய்யப்படாது.  பள்ளி திறக்கும் நாள் எது மூடும் நாள் எது  என ஏகப்பட்ட சர்ச்சைகள். அனைத்திலும் அரசியல். சனிக்கிழமை பள்ளி உண்டா என்று வெள்ளிக்கிழமை மாலை வரை எந்தக் கல்வி அலுவலகத்திற்கும் உறுதியாகத் தெரியாது. எத்தனை கல்வி அலுவலர்கள் , இணை இயக்குநர்கள் நம் மாநில கல்வித்துறையில்?

தெளிவான திட்டமிடல், மாறாத நாட்காட்டி ஆகியவற்றுடன் கல்வி ஆண்டை தொடங்கினால் ஆசிரியர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் பணிகளை திட்டமிடுவார்கள். தங்களுடைய வீட்டு விசேஷங்கள், மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் வருவது போல் அமைத்துக் கொள்வார்கள். 

மாதத்தின் ஒற்றைப்படை சனிக்கிழமைகளில் வங்கி , இன்சூரன்ஸ் அலுவலகங்கள் செயல்படும். அந்த சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் தங்கள் வங்கி மற்றும் மற்ற பணிகளை சிரமமின்றி முடித்துக்கொள்வர். மாதத்தின் இரட்டைப் படை சனிக்கிழமைகளில் வங்கி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை.  அந்த சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் வேலை நாளாக அறிவிக்கலாம். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

2019 புதிய கல்விக் கொள்கை வரைவில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை குறைத்து 100 சதவீதம் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்கிறது. என்ன செய்ய அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது? அவர்கள் உடம்பும் இரும்பால் செய்யப்படவில்லை.

திட்டமிட்டு செயல்படுவதால் யாருக்கு நன்மை?  சுப நிகழ்ச்சிகள், வங்கிப்பணிகள் , மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட வேலைகளுக்காக ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை குறைத்துக்கொள்வர். மாணவர்களின் கற்றல் நிகழ்வில் தடங்கல், சுணக்கம் ஆசிரியர்கள் வருகை இன்மையால்  ஏற்படாது. மாணவர்கள் பலனடைவர்.

நான் இதை தட்டச்சு செய்வதற்குள் "ஜூன் 8 ம் தேதி டெட் தேர்வு இருக்கே ? அதனால் ஸ்கூல் இருக்காதுல்ல ?  அடுத்த சனிக்கிழமை இருக்குமோ?என வாட்ஸ் அப்பில் நம் ஆசிரியர்கள் களமாட தொடங்கி விட்டனர். உங்கள் ஆர்வக்கோளாறுக்கு பெரிய கும்பிடு. ஆளை விடுங்கப்பா.