. -->

Now Online

FLASH NEWS


Sunday 25 August 2019

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை




மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி கவுன்சிலர்கள், சேர்மன், மேயர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. இதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.

ஆனால் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் நடை பெறாமல் தள்ளிபோய் கொண்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் வார்டு மறுவரையறை செய்யும் பணி நடைபெற்றது. இந்த முறை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளதால் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் கோர்ட்டில் உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மையமாக வைத்து வார்டு வாரியாக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. கிராம பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 92 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் கைவசம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த 1 லட்சத்து 45 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் தேவைப்படுவதால் வெளி மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது. இதுபற்றி மாநில தேர்தல் ஆணைய அதிகாரி கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே எந்த தேதிக்குள் தேர்தலை நடத்துவது என்பது குறித்து அட்டவணை சமர்ப்பித்துள்ளோம். அதற்கேற்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது கைவசம் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் போதாது என்பதால் வெளி மாநிலத்தில் இருந்தும் எந்திரங்களை கொண்டு வருகிறோம். தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். எனவே இந்த முறை கட்டாயம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.