. -->

Now Online

FLASH NEWS


Tuesday 13 August 2019

தனியார் பள்ளியில் இனி சேர்க்க மாட்டோம்!' - மூடிய அரசுப் பள்ளியைத் திறக்க ஒன்றுகூடிய கிராமம்

`


தமிழகத்தில் ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்ட அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், மூடப்படும் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாக 46 பள்ளிகள் கண்டறியப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் இந்தப் பட்டியலில் இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி குளத்தூர் தொடக்கப்பள்ளி மூடப்பட்டது.


மாணவர் சேர்க்கைக்காகப் போராடி வந்த ஆசிரியை, பள்ளியை மூடிவிட்டு கனத்த இதயத்துடன் பள்ளியை விட்டுப் பிரிந்து சென்றார்.இந்தநிலையில்தான், பள்ளி திடீரென மூடப்பட்ட தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று கூடி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், கிராம மக்கள் அனைவருமே தங்கள் குழந்தைகளை குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் போட்டனர்.


வெறும் தீர்மானமாக மட்டுமல்லாமல், சிலர் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக, தனியார் பள்ளியில் படித்து வந்த தங்களது பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கி வந்து விட்டனர். இதுபற்றி, கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, பள்ளியை எப்படியாவது திறக்க வேண்டும் என்ற நோக்கில் கிராமத்தினர் ஒன்று திரண்டு 11 மாணவ, மாணவிகளுடன் இன்று காலை பள்ளியின் முன்பு அமர்ந்து காத்திருந்தனர்.


கல்வித்துறை அதிகாரிகள் வரவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம், வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கிராமத்தினர், ``பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்காமல், தனியார் பள்ளிகளில் சேர்த்தது தவறுதான். இனி இதுபோன்று நடக்காது. ஒருபோதும் இனி பள்ளியை மூட விடமாட்டோம்" என்றனர்.


இடை நில்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் அறிவுறுத்திய மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளியைத் திறந்து வைத்தார். உற்சாகத்துடன் மாணவர்கள் பள்ளிக்குள் சென்றனர். கிராம மக்களின் முழு முயற்சியால், மூடப்பட்ட 46 பள்ளிகளில் முதல் பள்ளியாக புதுக்கோட்டை, குளத்தூர் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.


`இதுபோன்று 46 பள்ளிகளும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து பள்ளிகளைத் திறக்க வேண்டும்' என்கின்றனர் குளத்தூர் மக்கள்.


மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் கூறுகையில், ``ஒரே ஒரு மாணவர் இருந்ததால்தான் பள்ளி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்போது, ஒரே நாளில் 11மாணவர்களைச் சேர்த்துள்ளனர். கிராம மக்களின் கூட்டு முயற்சி வரவேற்கத்தக்கது. உயர் அதிகாரிகளிடம் இதுபற்றிப் பேசியபோது, பள்ளியைத் திறக்க அனுமதி அளித்தனர். தொடர்ந்து, தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்" என்றார்.