. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

Now Online

Sunday, 4 August 2019

உங்களின் நல்ல நண்பர் யார் ???


இந்தியாவில் உலக நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மற்ற எல்லா உறவுகளையும்விட தனித்துவமானது நட்பு என்பதை ஞாயிற்றுக்கிழமையன்று (ஆக.4) அனைவரும் நினைவில் கொள்வது நல்லது.

காரணம், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாச் சொந்தங்களும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை. ஒரு குழந்தை பிறக்கப் போகிறதென்றால், இன்னார்தான் அந்தக் குழந்தையின் தாய்மாமன் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஆனால், நட்பு அப்படியல்ல; இன்னார்தான் இன்னாரோடு நண்பராகப் போகிறார் என்று யாரும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகமும் சதையும் ஆக இருந்த நண்பர்களின் வாரிசுகள் நண்பர்களாக இருப்பதில்லை.

ஒரு நல்ல நட்பை யாசகமாகவோ, மிரட்டியோ, பணத்தாலோ பெற்றுவிட முடியாது. நட்புக்கு ஆண்-பெண் என்ற பாலின வேறுபாடோ அல்லது இளைஞர்-முதியவர் என்ற வயது வேறுபாடோ கிடையாது. எதேச்சையாக ஒருவரிடம் அறிமுகமாகி நீண்ட காலம் பழகி அவரின் அன்பால், பண்பால், செயலால் ஈர்க்கப்பட்டு அவரிடம் உரிமையோடு அன்பு செலுத்தி, அவரின் குறைகளை நேருக்கு நேர் பளிச்சென்று கூறி, நிறைகளை மற்றவரிடம் சொல்வதே உண்மையான நட்பு.

அப்படிப்பட்ட உண்மையான நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முன்பு நன்றாக யோசிக்க வேண்டும். ஆனால், தேர்ந்தெடுத்து நட்பு பாராட்டிய பின்னர், அவர்களைச் சந்தேகிப்பது நம்மை மீள முடியாத துன்பத்தில் தள்ளி விடும். நல்ல நட்பை எப்படி ஆராய்ந்து அறிவது, நல்ல நண்பர்களை அடையாளம் காண்பது எப்படி எனக் கேள்வி எழுவது இயல்பானது.

இதற்குப் பதில் தருகிறது ஒரு பழைமையான பாடல். நண்பர்களை பனை மரம், தென்னை மரம், வாழை மரம் என அது மூன்று வகையாகப் பிரிக்கிறது.

முதலாவது, பனை மரம். அது யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல; பனம் பழத்தைத் தேடி எடுத்து யாரும் மண்ணுக்குள் விதைப்பதில்லை; அது தனக்குக் கிடைத்த நீரைக் குடித்து தானாகவே முளைக்கிறது; தன் உடலையும், ஓலையையும், நுங்கையும் மனிதகுலத்துக்கு அளிக்கிறது; பிறரிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் உதவும் நண்பர் பனை மரம் போன்றவர். இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பது மிக அரிது.

தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றினால்தான் நமக்குப் பலன் தரும்; அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நம்மிடம் நண்பனாக இருப்பவர் தென்னை மரம் போன்றவர்.

மூன்றாவது வாழை. அதற்கு நாம் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்; இல்லையென்றால் அது பலன் தராது. அதே போன்று நம்மிடம் தினமும் உதவி பெற்றுக்கொண்டு வாழும் நண்பரை வாழைக்கு ஒப்பிடலாம்.

நாம் அனைவரும் இந்த மூன்று மரங்களில் நமக்கு கிடைக்க வேண்டிய நண்பர் பனை மரம் போன்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அப்படித்தான் நம் நண்பர்களிடமும் எதிர்பார்ப்பு இருக்கும். எனவே, முதலில் நாம் பனை மரம் போன்று ஒரு நல்ல, உற்ற நண்பனாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.அப்போதுதான் நமக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

சரி. ஒரு நல்ல நண்பரை எப்படி ஆராய்ந்து அறிவது? ஒருவரிடம் பழக ஆரம்பித்த உடனே நம்மைப் பற்றிய அனைத்து அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது முற்றிலும் தவறு. எடுத்த எடுப்பிலேயே ஒருவரை நண்பராகக் கருதி நாம் சொல்லும் உண்மைகளை, கூட்டத்தில் அவர் கேலியாகச் சொல்லி சிரிக்கும்போது ஆழ் மனதில் ஈட்டி இறங்கியது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். நீங்கள் நம்பிச் சொல்லிய உண்மைகளை அவர் பிறரிடம் கேலியாகச் சொன்னால், அவரின் நட்பை நீங்கள் உடனே துண்டிக்கலாம். அதில் தவறேதுமில்லை.

இரண்டாவது, நீங்கள் ஏதேனும் தவறு செய்திருப்பின் உங்களின் முகத்துக்கு நேரே அதைச் சுட்டிக் காண்பிக்கிறாரா அல்லது முதுகுக்குப் பின்னால் சென்று பிறரிடம் வசைபாடுகிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவேளை, அவர் முதுகுக்குப் பின்னால் பேசும் குணம் உடையவர் என்பதை நீங்கள் உறுதி செய்தால், உங்களின் நட்பை அந்த விநாடியிலேலே முறித்துக் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

மூன்றாவது, உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும். முகஸ்துதி பாடுவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. அதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் செயலை ஊக்கப்படுத்தி விட்டு, நீங்கள் இல்லாதபோது பிறரிடம் உங்களை புகழ்ந்து பேசி, மற்றவர் உங்களைக் குறை கூறும்போது உங்களை எவர் ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களானால் உங்களின் உயிர் நண்பரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
தன் நண்பர் தீய பழக்கங்கள் உடையவராக இருந்தாலும்கூட, அதில் ஈடுபடக் கூடாது என அவரிடம் உரிமையோடு கூறுபவரே நல்ல நண்பர்; மாறாக, மது குடிக்க வற்புறுத்தும் நண்பராக இருந்தால், அது நட்பே கிடையாது; அதற்குப் பெயர் கூடா நட்பு. அப்படிப்பட்ட நட்பை துணிந்து துண்டிக்க வேண்டும்.நண்பருக்காக ஒரு தடவை என்று பிறர் சொல்வதை ஒருவர் செய்வாரேயானால் அது கெடுதலாகும்.
எனவே, ஒரு நண்பரை தேர்ந்தெடுக்கும் முன்பு பல முறை யோசிக்க வேண்டும்.

ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பரைப் போன்றது. ஒரு நல்ல நண்பர், ஒரு நூலகத்துக்கு ஒப்பானவர் என்பார் பெரியோர். நம் உள்ள உணர்வுகளை கொட்டித் தீர்க்க, மனபாரங்களை இறக்கி வைக்க, மகிழ்ச்சியைக் கொண்டாட, துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு நல்ல நண்பரோ, தோழியோ அவசியம்.
காலமெல்லாம் நம்முடன் பயணிக்க இருக்கும் அந்தச் சக பயணியை கொஞ்சம் நிதானமாகத் தேர்ந்தெடுக்கலாம். நட்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் என்னவோ, நட்புக்கு மட்டும் நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களை திருவள்ளுவர் படைத்துள்ளார்.

🎉🎉🎉 இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்-கல்விச்சுடர்🎉🎉🎉


CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN