. -->

Now Online

FLASH NEWS


Wednesday 4 September 2019

சென்னையில் நாளை ஆசிரியர் தினவிழா: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது



பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆசிரியர் தினவிழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கெளரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையான கற்பித்தல் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான ஆசிரியர் தின விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 165 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 165 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் 32 ஆசிரியர்கள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 3 பேர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 10 பேராசிரியர்கள் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கவுள்ளார். இதைத் தொடர்ந்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்புரையாற்றவுள்ளார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் ஆகியோர் உள்பட கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.