. -->

Now Online

FLASH NEWS


Sunday 8 September 2019

உலக எழுத்தறிவு தினம் இன்று

*அறிவுடையார் எல்லாம் உடையார்...! (இன்று உலக எழுத்தறிவு தினம்)*


அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம்.


*எழுத்தறிவு தினம்!*


ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம்.


*எழுத்தறிவின்மை!*


ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை  உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.




*எழுத்தறிவின்மையும், பிரச்னைகளும்!*


எழுத்தறிவைப் பெறமுடியாததற்கான சமூக நிலை தொடர்பானவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.


*எழுத்தறிவு மிகவும் முக்கியம்!*


எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது...


*- ஜெ.நிவேதா*