. -->

Now Online

FLASH NEWS


Monday 7 October 2019

புதிய கல்விக் கொள்கைகளை அமல்படுத்த மாநிலங்கள் போர்க்கொடி


'புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, மத்திய அரசு கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, மாநிலங்கள் போர்க் கொடி தூக்கியுள்ளன. தற்போது அமலில் உள்ள தேசிய கல்விக் கொள்கை, 1986ல் உருவாக்கப்பட்டது. பின், 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

அறிக்கை தாக்கல்

'நாடு முழுவதும் புதியக் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்' என, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., அறிவித்தது. தேர்தலில் வென்று ஆட்சி அமைந்த பிறகு, இதற்கான முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஈடுபட்டது. முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு, பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்தது.

ஆனால், அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களுக்கு, எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர், கே. கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பா.ஜ., தலைமையிலான அரசு, இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம், தன் அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்தக் குழுவின், வரைவு கல்விக் கொள்கை, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுவரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நிதி இல்லை

இந்த நிலையில், இந்தக் கல்விக் கொள்கை குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய கல்வி வாரிய ஆலோசனைக் குழுவின் கூட்டம், டில்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான, மாநிலக் கல்வி அமைச்சர்கள், 'தேசியக் கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை வரவேற்கிறோம். ஆனால், இவற்றை செயல்படுத்துவதற்கு மாநில அரசுகளிடம் போதிய நிதி இல்லை. 'இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, வரைவு கொள்கையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை' என, கருத்து கூறியுள்ளனர்.

கூட்டத்தில், மாநில அமைச்சர்கள் கூறியதாவது:பீஹார் கல்வி அமைச்சர் கே.என்.பிரசாத் வர்மா: இந்தக் கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதில், நிதி மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி திட்டம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது, மாநிலத்துக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும். கர்நாடக கல்வி அமைச்சர், சி.என். அஸ்வத் நாராயணன்: கல்விக் கொள்கை திட்டங்களை செயல்படுத்துவதற்கு, அதிக நிதி தேவைப்படுகிறது.

தற்போது கிடைக்கும் வருவாய், மானியங்களுக்காகவே பெருமளவு செலவிடப்படும் நிலை உள்ளது. டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா: மத்திய அரசின் விருப்பங்கள், இந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி குறித்து, ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. நம் நாட்டில், கல்விக் கொள்கையானது மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், நிதிதான் மோசமாக உள்ளது. ஒடிசா கல்வி அமைச்சர், அருண்குமார் சாஹோ: திட்டங்களை செயல்படுவதற்கான நிதி குறித்தும் விரிவாக திட்டமிட வேண்டும். முன்னாள் மாணவர்கள் மூலம் நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றை செயல்படுத்தலாம்.

ஆந்திரா கல்வி அமைச்சர் ஆடிமுலாபு சுரேஷ்: முன்பள்ளி கல்வி திட்டம், அங்கன்வாடி ஆகியவை, அதிக நிதி தேவைப்படுபவை. மத்திய அரசும் நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும். மத்திய பிரதேச கல்வி அமைச்சர், பிரபுராம் சவுத்ரி: அதிக நிதியை ஒதுக்க வேண்டும். அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். மிஜோரம் கல்வி அமைச்சர் லால் சந்தா ரால்டே : ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் திணறுகிறோம். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த உரிய நிதி உதவி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Source: Dinamalar