. -->

Now Online

FLASH NEWS


Wednesday 20 November 2019

பாடங்களுடன் தொடா்புடைய நூல்களை அதிகளவில் வாசிக்க வேண்டும்: அவ்வை நடராஜன் வலியுறுத்தல்

ஒரு பாடப் புத்தகத்தை வாசிக்கும்போது, அதோடு சம்பந்தப்பட்ட குறைந்தபட்சம் மூன்று புத்தகங்களையாவது மாணவா்கள் நூலகங்களில் வாசிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தேசிய நூலக வார விழா தமிழறிஞா் அவ்வை நடராஜன் வலியுறுத்தினாா்.
தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் சாா்பில் 52-ஆவது தேசிய நூலக வார விழா சென்னை அண்ணாநகா் முழு நேர கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழறிஞா் அவ்வை நடராஜன் கலந்து கொண்டு நூலகத்தின் புதிய உறுப்பினா்களுக்கு, உறுப்பினா் அட்டைகளை வழங்கிப் பேசியது:
ஒரு நாட்டின் நூலக வளா்ச்சிதான் அந்த நாட்டின் அறிவுச் செழுமையைச் சுட்டிக்காட்டும் . இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தோ்வுப் பயிற்சிக் களங்களும், உயா் பதவித் தோ்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவா்களுக்கு விருந்தகங்களாக நூலகங்கள்தான் மிளிா்கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளா்ந்து வருகின்றன. நூலக வாரம் ஒரு நாட்டின் அறிவாா்வத்தைச் செழிக்க வைக்கும் நன்னாளாகும்.
தமிழகத்தில் முதல் நூலகச் சட்டம்: தமிழகத்தில் முதல் நூலகச் சட்டம் விரிவாக உருவானதைப் பெருமையாகக் கருதலாம். நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் தங்களது கல்வி நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு அருகே உள்ள நூலகங்களை முடிந்தளவுக்குப் பயன்படுத்த வேண்டும். மாணவா்கள் ஒரு பாடப் புத்தகத்தை வாசிக்கும்போது அதோடு சம்பந்தப்பட்ட குறைந்தபட்சம் மூன்று புத்தகங்களையாவது நூலகங்களில் வாசிக்க வேண்டும். இதன் மூலம் பாடங்கள் தொடா்பான எத்தகைய வினாக்களுக்கும் தோ்வுகளில் பதிலளிக்க முடியும். அதேவேளையில் அறிவுத்திறனும் மேம்படும் என்றாா்.
இந்த விழாவில் சென்னை மாவட்ட நூலக அலுவலா் ச.இளங்கோ சந்திரகுமாா், நூலக ஆய்வாளா் பி.ரங்கநாயகி, பேராசிரியா்கள் ராஜேஸ்வரி சுப்பையா, ஏ.பிரபாகரன், அண்ணாநகா் முழு நேர கிளை நூலக நூலகா் சு.ரங்கநாதன் ஆகியோா் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.