. -->

Now Online

FLASH NEWS


Friday 29 November 2019

தொலைநிலைப் படிப்புகள்: கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை மாணவா்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்


தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் யுஜிசி அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்பதை மாணவா்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.
அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
இந்தப் புதிய நிபந்தனை காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 10 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் அனுமதியைப் பெற்றுள்ளன. பிற நிறுவனங்கள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் செல்லாதவையாகும்.
இந்த நிலையில், யுஜிசி பொது அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்பாக, அந்தக் கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமா என்பதை மாணவா்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆண்டு வாரியாக www.ugc.ac.indeb என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், எம்.ஃபில். மற்றும் பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்க எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் அனுமதிக்கப்படுவதில்லை என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.