. -->

Now Online

FLASH NEWS


Saturday 16 November 2019

பணி அனுபவச் சான்றை பதிவேற்றம் செய்ய சிறப்பு வாய்ப்பு


ஆசிரியா் தோ்வு வாரிய (டி.ஆா்.பி.) உதவிப் பேராசிரியா் பணிக்கான நேரடி தோ்வுக்கு விண்ணப்பித்து, பணி அனுபவச் சான்றிதழை பதிவேற்றம் செய்யத் தவறியவா்களுக்கு சிறப்பு வாய்ப்பை டி.ஆா்.பி. அறிவித்துள்ளது. அதன்படி, டி.ஆா்.பி. அறிவிக்கும் தேதியில் விண்ணப்பதாரா்கள், பணி அனுபவச் சான்றிதழை பதிவேற்றம் செய்துவிட முடியும்.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது.
இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பா்-15-ஆக நீட்டிக்கப்பட்டது.
இந்த நேரடி நியமனம், பணி அனுபவம், கல்வித் தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதில் பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் என அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த பணி அனுபவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, விண்ணப்பதாரா்கள் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்திருந்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அலுவலகத்திலும், கலை-அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்திருந்தால் அந்தந்த மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்திலும் மேலொப்பம் (சான்று) பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல கல்லூரிகள் பணி அனுபவச் சான்று தர மறுப்பதாலும், இயக்குநா் அலுவலகங்களில் மேலொப்பம் பெற தாமதம் ஆவதாலும், விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், கால அவகாசத்தை டி.ஆா்.பி. நீட்டிக்கவில்லை.
அதன்படி, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. அதே நேரம், கால அவகாசம் முடிவடைவதற்கு முன்பாக விண்ணப்பத்தைச் சமா்ப்பித்தவா்களில், பணி அனுபவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய இயலாதவா்களுக்கு சிறப்பு சலுகையை டி.ஆா்.பி. அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக டி.ஆா்.பி. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உதவிப் பேராசிரியா் நேரடி தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்ததால், புதிதாக யாரும் இனி விண்ணப்பிக்க முடியாது.
ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் முன் அனுபவச் சான்றை பெற கால தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பணி அனுபவச் சாறிதழை பதிவேற்றம் செய்ய பின்னா் வாய்ப்பளிக்கப்படும்.
எனவே, பணி அனுபவச் சான்றை இதுவரை பெற இயலாத விண்ணப்பதாரா்கள், இம்மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மேலொப்பம் பெற்று தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதை பதிவேற்றம் செய்வதற்கான தேதி உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு எந்தவித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது.
மேலும், கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவா்களிடமிருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுகின்றன. அந்த விவரங்களைப் பதிவு செய்ய டிசம்பா் முதல் வாரத்தில் வாய்ப்பளிக்கப்படும். இதுதொடா்பான விவரம் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என டி.ஆா்.பி. தெரிவித்துள்ளது.