. -->

Now Online

FLASH NEWS


Thursday 16 January 2020

முன்னாள் மாணவர்கள் முயற்சியால் அரசு உதவி துவக்கப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமத்துவ பொங்கல் விழா...


அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர்கள் முயற்சியால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருவது கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீழ குண்டலாபாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் ஆற்றை தாண்டி செல்ல வேண்டும். மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் இப்பகுதி மக்கள் படகு மூலம் வந்து சிதம்பரம் மற்றும் நகர பகுதிக்கு செல்வார்கள். பள்ளி மாணவர்களும் படகு மூலம் வந்து பள்ளிக்கு செல்வார்கள். இந்த கிராமம் கொள்ளிடம் கரையில் உள்ளதால் விவசாயம் செழிப்பாக இருக்கும்.

மேலும் இந்தப் பகுதியில் உள்ள திட்டுகாட்டூர், அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் ஆகிய கிராமங்கள் மழைகாலங்களில் தீவு போல் இருக்கும்.

இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் முயற்சியின் பேரில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

இப்படியுள்ள இந்தகிராமத்தில் பழமை வாய்ந்த அரசு உதவிபெறும் ராசப்பன் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு வந்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மேலும் நண்பர்களின் உதவியால் நடப்பு ஆண்டுகளில் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தனியார் பள்ளிக்கு இணையாக செய்து வருகிறார்கள். இது கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே இந்த ஆண்டும் சமத்துவ பொங்கல் விழா கீழகுண்டலபாடி துவக்கபள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பள்ளியின் முன்பு கரும்பு மற்றும் தோரணங்கள் அமைத்து பொங்கலிட்டு மாணவர்களுக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து சீர்காழியிலுள்ள மருத்துவ தம்பதியினர் பாலாஜி, வானதி ஆகியோர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 200 பேருக்கு பரிச்சை அட்டை, பேனா, நோட், டிபன் பாக்ஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ், பள்ளிக்கு குடிநீர் கேன், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.

இதேப்பகுதியில் உள்ள பெராம்பட்டு, அக்கரைஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த கல்வி உபரகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், சமூக ஆர்வலர் யாமினி, திட்டுகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவாஜி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாணவர்கள் 200 பேருக்கும் தென்னங்கன்று வழங்கப்பட்டது. இதனை நன்கு வளர்த்து வருபவர்களுக்கு ரூ 1000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.