. -->

Now Online

FLASH NEWS


Thursday 23 January 2020

உயர்கல்வி தரத்தை உயர்த்த புதிய திட்டங்கள்!

உயர்கல்வியில், கிரெடிட் அடிப்படையிலான பாட அமைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் முன்னோட்ட நிலையில் உள்ளது, என, யு.ஜி.சி., துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்தார்.இந்திய மனையியல் சங்க, 33வது தேசிய மாநாடு, கோவை, அவினாசிலிங்கம் பல்கலையில் நேற்று துவங்கியது. 

மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், ஆய்வுகள், கருத்தாக்கங்கள், விரிவுரைகள், பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. நாடு முழுவதிலிருந்தும், 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.துவக்க விழாவுக்கு பின், யு.ஜி.சி., துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:யு.ஜி.சி., அமைப்பின் நோக்கம் அனைவருக்கும் தரமான கல்வியை தருவது தான். கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் கல்விக்கும் ஊக்கம் தருகிறோம்.இதற்காக தேசிய அகாடமிக் கிரெடிட் பாங்க் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மாணவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை பயக்கும். கிரெடிட் அடிப்படையிலான பாட அமைப்பு திட்டத்தில், மாணவர்கள் பட்டம் பெற குறிப்பிட்ட கிரெடிட் எண்ணிக்கை பெற வேண்டும்.செமஸ்டர் அவுட்ரீச் திட்டம் கருத்துருவாக்க நிலையில் உள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களுக்கு அனுபவ கற்றல் கிடைக்கும் நோக்கில், மற்ற கல்லுாரிகள் அல்லது பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இத்திட்டம் முதலில் முன்னோட்டமாக செயல்படுத்தப்படும். இதுபோன்ற திட்டங்கள் தான் வருங்காலங்களில் உயர்கல்வியை மேம் படுத்த வாய்ப்புகளாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மன்கட்ராம் சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பரோடா, எம்.எஸ்., பல்கலை தலைவர் அஞ்சலி கரோலியா, அவினாசிலிங்கம் பல்கலை நிர்வாக அறங்காவலர் மீனாட்சிசுந்தரம் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.