. -->

Now Online

FLASH NEWS


Wednesday 25 March 2020

வங்கிகளின் பணி நேரம் குறைப்பு: மதியம் 2 மணி வரை தான் இயங்கும்!


கொரோனா வைரஸ் பரவல் பீதியை தொடர்ந்து, வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, வங்கிகள் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு, நேற்று வெளியிட்ட, பொது வணிக தொடர்ச்சி திட்ட விபரம்: நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், அவை வங்கிகளில் பரவாமல் இருக்க, சரியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதற்காக, பொது வணிக தொடர்ச்சி திட்டம் நடைமுறைக்கு வருகிறது.


இதன்படி..

* தமிழகத்தில் உள்ள வங்கிகள், அடுத்த அறிவிப்பு வரும் வரை, பணம் செலுத்துதல், பெறுதல், காசோலை பரிவர்த்தனை, அரசு பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் போன்ற வற்றை, காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை மேற்கொள்ளலாம்

* பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல், ஏ.டி.எம்., இயந்திரம், பணம் செலுத்தும் இயந்திரம் போன்ற சேவைகள், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

* பெட்டிகளில் போடப்படும் காசோலைகள், ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற சேவைகளும் கிடைக்க, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

* ஊழியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, 50 சதவீத ஊழியர்கள் அலுவலகம் வரவும், மீதமுள்ளோர், வீட்டில் இருந்து பணி புரியவும், வங்கி கிளைகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்

* கூட்டம் அதிகம் உள்ள வங்கிகள், தேவையெனில், போலீஸ் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம்

* பாதிப்புக்குள்ளான பகுதிகள், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, அரசு அறிவித்திருந்தால், அந்தப் பகுதி வங்கிகளை, அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை மூடலாம்.இது தொடர்பான அறிவிப்புகளை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.