. -->

Now Online

FLASH NEWS


Thursday 4 June 2020

தனியார் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் தொடக்கம்



பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகளில் இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் செல்லிடப்பேசிகளின் விற்பனை அதிகரித்துள்ளதோடு, தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
 நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து பொது முடக்கம் தொடர்ந்து வருகிறது. இன்னும் நோய்த்தொற்று கட்டுக்குள் வராத நிலையில், பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதத்திற்கு பிறகே திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 இதனால் பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், மாணவ-மாணவியருக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இணைய வழியில் படிப்பதற்கு மாணவ-மாணவியருக்கு 4 ஜி ஆண்ட்ராய்ட்  வசதிகளுடன் கூடிய செல்லிடப்பேசிகள் அத்தியாவசியமாகியுள்ளது. எனவே, இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகப் பள்ளி, கல்லூரிகள் அறிவித்துள்ளதால், தங்களது குழந்தைகளுக்கு செல்லிடப்பேசிகளைப் வாங்கி கொடுப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், செல்லிடப்பேசிகள் விற்பனை அதிகரித்துள்ளது, பல இடங்களில் செல்லிடப்பேசிகளுக்கு தட்டுப்பாடும்,  விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து வாழப்பாடிச் சேர்ந்த மகேஸ்வரி(30) கூறியதாவது: 
 எனது மகள்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 

இணையவழியில் வகுப்புகளை நடத்துவதால், இருவருக்கும் செல்லிடப்பேசிகள் வாங்கிக்கொடுக்க வேண்டுமெனப் பள்ளி நிர்வாகத்தின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேறுவழியின்றி குழந்தைகளுக்காக புதிய செல்லிடப்பேசி வாங்கி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு செல்லிடப்பேசி குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் குழந்தைகளுக்காகச் செல்பேசிகளைக் கொள்முதல் செய்து வருவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது என்றார்.