t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.06.2026

திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:422

குறள்:

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

பொருள்:

மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌.

பழமொழி :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

Health is wealth.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் .

2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன்.

பொன்மொழி : 

தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் படி.

Thought for the Day :

"Success is not about being the best. It is about being better than you were yesterday."

பொது அறிவு : 

1. ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது? 

தமிழ்நாடு. 

2. உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? 

திபெத்.

English words :

Around - On all sides , சுற்றிலும். 

Awake - rouse from sleep, தூக்கத்திலிருந்து எழுப்பு.

புவியியலும் சுற்றுசூழலும் :

புவியியல் ஏன் முக்கியம்?
✅ பூமியைப் பற்றி அறிய உதவுகிறது.


✅ வெவ்வேறு நாடுகள் மற்றும் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.


✅ இயற்கை வளங்களைப் பாதுகாக்க கற்றுக்கொடுக்கிறது.


✅ சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது

ஜூன் 05

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) 

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில இருபதாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.
நீதிக்கதை

 நீதிக்கதை: "சின்ன விதையும் பெரிய மரமும்"

ஒரு கிராமத்தில் ஒரு சின்ன விதை மண்ணுக்குள் விழுந்தது. அது சுற்றிலும் பெரிய பெரிய மரங்களைப் பார்த்து,

"நான் இவ்வளவு சின்னதாக இருக்கிறேன். என்னால் எப்படி இவர்களைப் போல வளர முடியும்?" என்று கவலைப்பட்டது.

அப்போது அருகில் இருந்த மண் சொன்னது,

"நீ தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர முயற்சி செய்."

விதை அதன்படி மழைநீரைக் குடித்து, சூரிய ஒளியைப் பெற்று மெதுவாக முளைத்தது. நாட்கள் சென்றன. அது ஒரு செடியாக மாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவே ஒரு பெரிய மரமாக வளர்ந்தது.

அந்த மரத்தின் நிழலில் பல பறவைகள் கூடு கட்டின. பயணிகள் ஓய்வெடுத்தார்கள்.

அப்போது அந்த மரம் நினைத்தது,

"ஒரு நாள் நான் சின்ன விதைதான். ஆனால் தினமும் முயற்சி செய்ததால் இன்று பெரிய மரமாக வளர்ந்தேன்."

நீதி: பெரிய வெற்றி ஒரே நாளில் கிடைக்காது. தினமும் சிறிது சிறிதாக முயற்சி செய்தால் பெரிய சாதனைகள் சாத்தியமாகும்.

இன்றைய செய்திகள்

05.06.2026

🗒️முதலமைச்சர் விஜய்  அவர்கள் இயற்கை வளங்கள் துறை சார்பில் ஆலோசனையின் முடிவில்  சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

🗒️புதிய சட்டசபை பேரவை செயலாளராக திருமதி சாந்தி பொறுப்பேற்றார் . தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் என்ற வரலாற்று சிறப்பு இவரைச் சேரும் .

🗒️வழக்கறிஞர்கள்  A I உதவியுடன் மனுக்கள் மற்றும் வாதங்களை தயாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

🗒️ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல் காரணமாக 900 விமான சேவைகள் ரத்து.

 🏀விளையாட்டு செய்திகள் 

🏀 நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் கார்ல்செனை  இளம் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தி 3 வது பெரும் சாதனை.

Today's Headlines

 🗒️ Chief Minister Vijay, at the conclusion of a consultation meeting held by the Department of Natural Resources, instructed officials to take action to prevent the illegal transportation and smuggling of mineral resources.

🗒️ Mrs. Shanthi has assumed office as the new Secretary of the Legislative Assembly. She becomes the first woman Secretary in the history of the Tamil Nadu Legislative Assembly.

🗒️ The Supreme Court has stated that lawyers may use AI assistance to prepare petitions and legal arguments.

🗒️ As a result of Typhoon Jangmi's widespread impact across Japan, 900 flight services have been cancelled.

🏀 Sports News

🏀 The Norway International Chess Tournament is being held in Oslo. In the tournament, young Indian chess player R Praggnanandhaa defeated Magnus Carlsen once again, achieving his third major victory over the Norwegian champion.


4 June 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.06.2026


திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:421

குறள்:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

பொருள்:

அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌.

பழமொழி :
முயற்சி திருவினையாக்கும். 


Effort never fails.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் .

2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன்.

பொன்மொழி : 

எதிர்காலம், தங்கள் கனவுகளின் உறுதியை நம்புபவர்களுக்கே சொந்தமானது.

பொது அறிவு : 

1. நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வர இஸ்ரோ மேற்கொள்ளும் திட்டம் எது?

 சந்திராயன் 4. 

2. உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளளது? 

ஜம்மு - காஷ்மீர். (செனாப் பாலம், 359 m)

English words :

Advance - put forward,முன்னுக்குப்போ. 

Another - One more, இன்னுமொரு.

புவியியலும் சுற்றுசூழலும் : 

பூமியையும் அதில் வாழும் மக்களையும் பற்றிப் படிக்கும் அறிவியல் புவியியல் ஆகும்.


புவியியலின் முக்கியப் பிரிவுகள்


🌍 இயற்கைப் புவியியல்

மலைகள்
ஆறுகள்
கடல்கள்
காலநிலை
நிலநடுக்கம், எரிமலைகள்

👨‍👩‍👧‍👦 மனிதப் புவியியல்

மக்கள் தொகை
நகரங்கள்
விவசாயம்
தொழில்கள்
போக்குவரத்து
ஜூன் 04

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்


ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது
நீதிக்கதை

 நீதிக்கதை: “குருவியும் பள்ளியும்”

ஒரு கிராமத்தில் ஒரு சிறிய குருவி இருந்தது. அதற்கு தினமும் நண்பர்களுடன் விளையாடுவதுதான் பிடிக்கும். அருகில் இருந்த மற்ற குருவிகள் எல்லாம் பள்ளிக்குச் சென்று புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டன.

ஆனால் இந்தக் குருவி, “இப்போ விளையாடுறதுதான் முக்கியம். படிப்பு பிறகு பார்த்துக்கலாம்!” என்று சொல்லி பள்ளிக்குப் போகாமல் இருந்தது.

சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் பெரிய புயல் வந்தது. மற்ற குருவிகள் ஆசிரியர் கற்றுக் கொடுத்தபடி பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுத்து தப்பித்துக் கொண்டன. ஆனால் பள்ளிக்குச் செல்லாத குருவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மிகவும் சிரமப்பட்டது.

அப்போது அதன் நண்பர்கள் உதவி செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

அன்றிலிருந்து அந்தக் குருவி, “விளையாட்டு முக்கியம் தான். ஆனால் படிக்க வேண்டிய வயதில் படித்தால் தான் வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என்று உணர்ந்து தினமும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது.

நீதி:

படிக்கிற வயதில் கல்வி கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் வரும் சவால்களை அறிவுடன் சமாளிக்க முடியும். 📚✨

இன்றைய செய்திகள்

04.06.2026

🗒️தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்கள்  ரூ.342 கோடியில் குடிநீர் நீர்த்தேக்கம் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் .

🗒️ மாவட்டம் முழுவதும் சிங்கப்பெண்  விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தவேண்டும் -உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

🗒️25 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு... 

🗒️ விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 🗒️ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவராக வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

🏀 விளையாட்டு செய்திகள்

பிரெஞ்சு ஓபன் -டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் உக்ரைனிய வீராங்கனை- வரலாறு படைத்த கோஸ்ட்யுக்

Today's Headlines

🗒️Tamil Nadu Public Works Department Minister N. Anand personally inspected drinking water reservoir projects worth ₹342 crore.

🗒️The High Court Bench has directed that "Singappen" awareness workshops be conducted across the district.

🗒️Heavy rainfall is likely in 25 districts.

🗒️The Central Government has decided to allocate ₹10,000 crore to help control aviation fuel prices.

🗒️Khalilur Rahman, Bangladesh's Foreign Minister, has been elected as the next President of the United Nations General Assembly.

🏀 Sports News

🗒️French Open Tennis: Marta Kostyuk created history by becoming the first Ukrainian woman player to advance to the semifinals of the French Open.


2 June 2026

மூத்த ஆசிரியர்களைப் புறந்தள்ளி பதவி உயர்வினைப் பெறத் துடிக்கும் இளைய ஆசிரியர்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்று பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 20000 பேரும், தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 15000 பேரும் பணியாற்றி வருகிறார்கள்.

அதில் பெரும்பாலானோர் வெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணிக்கு வந்தவர்கள். நியமனத் தேர்வு எழுதவில்லை.

2012 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட மூத்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 40000 பேரும், தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 100000 பேரும் என பணியாற்றி வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டுக்குப் பின்பு ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்குக் கட்டாயம் என்ற வழக்கு நடைபெற்றதால் இரு துறைகளிலும் எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.

உயர்நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டும் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 2025 லும் ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கும் பணியில் தொடர்வதற்கும் கட்டாயம் எனத் தீர்ப்பளித்தன.

அரசு தரப்பில் கட்டாயமில்லை என்ற முடிவில் 2010 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டதாலும் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்படாததாலும் மூத்த ஆசிரியர்கள் யாரும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதவில்லை.

பதினான்கு ஆண்டுகள் கழித்து எழுதித் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படனர்.

அதனைத் தொடர்ந்து சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் ஏதேனும் விலக்களிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அந்த இடைவெளியில் 2025 நவம்பரில்  பொதுவாக நடத்தப்பட்ட  தகுதித் தேர்வில் பங்கேற்ற மூத்த ஆசிரியர்கள் தேர்வெழுதி ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சியும் பெற்றனர்.

எஞ்சிய ஆசிரியர்கள் அரசு அறிவித்தபடி சிறப்பு தகுதித் தேர்வு நடத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விரைவாக நடத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தீர்ப்பையும் பெற்றனர்.

அதனடிப்படையில் வரும் ஜூலை 2026ல் தேர்வு நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வெழுதவும் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒரு வாய்ப்பு கூட மூத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை உறுதி செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.

எனவே 100% ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் மன நிலைக்கு மூத்த ஆசிரியர்கள் வந்து, தயாராக உள்ளனர்.

இவ்வாறான வழக்குகளால் நான்காண்டு காலம் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை மூத்த ஆசிரியர்களுக்காகக் காத்திராமல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி , பத்தாண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இளைய ஆசிரியர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பரிசீலனை செய்யுமாறு உத்தரவு பெற்றனர்.

அரசு தரப்பில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பரிசீலிக்க இயலாது என்று பதில் கடிதம் தரப்பட்டது. 

 *அதையும் தாண்டி, 150000 க்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்களைப் புறந்தள்ளி காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டு வாரியாகக் கணக்கிட்டு தமக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று மென்மேலும் வழக்குகளை இளைய ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தத் தடையாணை பெற முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது.

அரசியலில் மட்டும்தான் பதவிக்காக பாவம் புண்ணியம் எதுவும் பார்க்கப்படாது என்பது நடக்கும்!

 *ஆனால், படித்த ஆசிரியர்களும் பதவிக்காக அண்ணனாவது! தம்பியாவது!

 *வாய்ப்பினை எந்த வகையிலும் பெற்று முட்டி மோதி அடைய வேண்டும் என்றுதான் இருப்பார்கள் என்பது நிரூபணமாகிறது!

 *அரசு என்ன செய்யப்போகிறது?

 *பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

வாட்ஸ் அப் பகிர்வு

29 May 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு விவரம்..

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் -

பதவி உயர்வுக்கு டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பிலும் உறுதி செய்ததுள்ளது உச்சநீதிமன்றம்...

தேர்ச்சி அவகாசம் நீட்டித்து சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ஒரே ஒரு விலக்காக இரண்டு வருடத்திற்குள் தேர்வு பெற வேண்டும் என்பதை மூன்று வருடங்களாக உயர்த்தியுள்ளது...

ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றம் இன்று 

தீர்ப்பு பட்டியல் வழக்குகள்

2 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பு

ஆகஸ்ட் 31, 2028க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என மறு சீராய்வு மனுவில் தீர்ப்பு

Timeline for acquiring TET has been extended from 2 years to 3 years i.e. instead of 31.08.2027 the same has been extended till 31.08.2028. With these modification the Review Petition stands dismissed.


28 May 2026

தைராய்டு பிரச்சினை எதனால் வருகிறது? முழு விளக்கம்

🇨🇭 தைராய்டு_பற்றி 
🇨🇭 சற்று_தெளிவாக‼️ 
🇨🇭 தெரிந்து கொள்வோம்‼️⁉️⁉️
✅தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. 
✅உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. 
✅சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.
🟩தைராய்டு ஹார்மோன்கள்
✅'தைராக்சின்' (T4), 'டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களை இது சுரக்கிறது. 
✅இப்படிச் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவை. இந்த இரண்டு ஹார்மோன்கள் பெரும்பாலும் புரதத்துடன் இணைந்திருக்கும். 
✅சிறிதளவு ஹார்மோன்கள் புரதத்துடன் இணையாமலும் இருக்கும். அவற்றுக்கு FT3, FT4 என்று பெயர். 
✅இவை உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. 
✅இவற்றின் செயல்பாடுகளை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற ‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்' (TSH) கட்டுப்படுத்துகிறது.
🔴 குறை_தைராய்டு⁉️
✅தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் 'குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம்.
 
✅இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி ஆகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். 
✅ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.
🔴 தைராய்டு வீக்கம்⁉️
✅உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. 
✅இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு 'முன்கழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். 
✅பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. 
✅இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.
🔴 மிகைத்  தைராய்டு⁉️
✅தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு' ( Hyperthyroidism ) என்கிறோம். 
✅இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.
🟩 பரிசோதனைகள் #என்ன❓
✅வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். 
✅பொதுவாக T3 0.7 2 .04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 - 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.
✅இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். 
✅எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
🟩🔴முடிவுகள் எப்படி இருக்கும்?
👉குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.
👉 மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.
👉இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.
👉சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.
👉சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.
👉 FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.
👉 குறை தைராய்டு உள்ளவர்களுக்கு இரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.
🔴🟩 anti TPO பரிசோதனை
 ‘பாசிட்டிவ்’என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.
🟩#எப்படிச்_செய்வது⁉️
l இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
l பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தி யிருக்கக் கூடாது; புகைபிடிக்கக் கூடாது.
🟩இதர பரிசோதனைகள்
👉அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்.
👉இப்போது 'ஐசோடோப் ஸ்கேன்' பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிவிக்கிறது.
👉வீக்கம் காணும் தைராய்டு சுரப்பியிலிருந்து ஊசி மூலமாகச் சிறிய அளவில் திசுவை அகற்றி செல்களைப் பரிசோதிப்பதன் (FNAC) மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.
🟩#யார்_எதற்குச் #செய்துகொள்ள #வேண்டும்⁉️
👉 குறை தைராய்டு, மிகை தைராய்டு பிரச்சினை உள்ளதாகச் சந்தேகப்படுபவர்கள் முதலில் நோயைக் கணிப்பதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
👉 இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் நோயின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்குப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
👉தைராய்டு சுரப்பியில் வேறு பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
👉தைராய்டு சுரப்பிக்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
👉பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சினை உள்ளவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
👉இளம்பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
👉இதயநோய்க்காக அமிய்டோரான் (Amiodarone) மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

25 May 2026

பரிசோதனை ரகசியங்கள்: ரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள்(Lipid profile/ Cholestral test)

பரிசோதனை ரகசியங்கள்:  ரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள்
(Lipid profile/ Cholestral test)

Dr. கு.கணேசன்

கொழுப்பு என்றாலே கெட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொழுப்பில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. கொலஸ்ட்ரால், கொழுப்புப் புரதம், டிரைகிளிசெரைட்ஸ் எனக் கொழுப்பில் பலவிதம் உண்டு.

கொலஸ்ட்ரால் (Cholesterol)

'கொலஸ்ட்ரால்' மாமிச உணவிலிருந்து நேரடியாகக் கிடைக்கிற கொழுப்பு. உடலில் கல்லீரலும் இதைத் தயாரிக்கிறது. தேவைக்கு அதிகமாக மாவுச்சத்து உடலில் சேரும்போது, அதை கொலஸ்ட்ராலாகக் கல்லீரல் மாற்றிவிடுகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்துக்கு ஆபத்து.

கொழுப்புப் புரதம்

உணவிலிருந்து பெறப்படும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இதனால் தனியாகச் செல்ல முடியாது. எனவே, இது புரத மூலக்கூறுகளுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்குப் பயணிக்கிறது. இதற்குக் ‘கொழுப்புப் புரதம்' (Lipo protein) என்று பெயர். இது மூன்று வகைப்படும்:

1. எல்.டி.எல். ( Low Density Lipo protein - LDL)

2. ஹெச்.டி.எல். (High Density Lipo protein - HDL)

3. வி.எல்.டி.எல். (Very Low Density Lipo protein - VLDL)

முக்கியத்துவம் என்ன?

கொழுப்புப் புரதங்களில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்லும் கெட்டவை. இவை கல்லீரலிலிருந்து இதயத்துக்குக் கொழுப்பை எடுத்துச் சென்று, இதயத் தமனிக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்புக்குப் பாதை போடும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயை அடைத்துப் பக்கவாதம் வருவதற்கு ஏற்பாடு செய்யும். ஆகவே, இவற்றைக் 'கெட்ட கொழுப்பு' (Bad Cholesterol) என்கிறோம்.

ஆனால் ஹெச்.டி.எல். இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலில் வைத்து அதை கரைத்துவிடுகிறது. இதன்மூலம் மாரடைப்பு / பக்கவாதம் வராமல் பார்த்துக்கொள்கிறது. எனவே, இதற்கு ‘நல்ல கொழுப்பு' (Good Cholesterol) என்று பெயர்.

டிரைகிளிசெரைட்ஸ் (Triglycerides) 

'டிரைகிளிசெரைட்ஸ்' என்பது கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசெரால் கலந்த கொழுப்பு. ரத்தக் குழாய்களைத் தடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை நிறுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. மேலும் இது கொலஸ்ட்ரால், பாஸ்போ லிப்பிட்ஸ், புரதம் ஆகியவற்றுடன் இணைந்து வி.எல்.டி.எல். கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இப்படிக் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதால், இதுவும் இதயத்துக்கும் மூளைக்கும் ஆகாத பொருள்தான்.

உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இருக்கும் விகிதத்தைக் கண்டறிய ஒரு பரிசோதனை உதவுகிறது. அதுதான், லிப்பிட் ஃபுரொபைல் (Lipid Profile ) பரிசோதனை.

மேற்சொன்ன ஐந்து கொழுப்புகளையும் ரத்தத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு ‘லிப்பிட் புரொஃபைல்’ பரிசோதனை என்று பெயர்.

யாருக்குத் தேவை?

# 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# உடல்பருமன், இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு உள்ள வர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் இந்தச் சோதனையை வருடத்துக்கு இரண்டு முறை செய்துகொள்ள வேண்டும்.

# ரத்தக் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தக் கொலஸ்ட்ராலை மட்டும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?

# இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

# இவர்கள், பரிசோதனைக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# பரிசோதனைக்கு முதல் நாள் இரவு உணவை முடித்த பிறகு, எதையும் சாப்பிடக் கூடாது (ஃபாஸ்டிங்).

# எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் கழித்து, அதாவது மறுநாள் காலையில் பரிசோதனைக்கு வர வேண்டும்.

# பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக்கூடாது; புகைபிடிக்கக்கூடாது.

கொழுப்பு வகை சரியான அளவுகள்:
(Normal levels)

# மொத்தக் கொலஸ்டிரால்150 முதல் 180 மி.கி. / டெ.லி. வரை

# எல்.டி.எல். 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக

# ஹெச்.டி.எல். ஆண்களுக்கு 40 மி.கி. / டெ.லி.க்கு (40mg/Dl) அதிகமாக;

# பெண்களுக்கு 50 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக

# வி.எல்.டி.எல் 30 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக

# டிரைகிளிசெரைட்ஸ்150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக

இந்த அளவுகளில் கொழுப்பு அதிகம் எனத் தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கொழுப்பைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, உடல்பருமனைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை.

கவனம் தேவை

# ஹெச்.டி.எல். 60 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்துக்கு வரவுள்ள ஆபத்தை உடல் இயற்கையாகவே தடுத்துவிடும்.

# எல்.டி.எல். 160 மி.கி. . டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதயத்துக்கு ஆபத்து வரலாம்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

24 May 2026

வாசகரின் இயல்பு





உங்கள் நேரத்தை நான் கேட்கவில்லை ஒரு பார்வைதான் நான் கேட்கிறேன்.

உங்கள் கவனத்தை நான் கேட்கவில்லை ஒரு ரசனைதான் நான் கேட்கிறேன்.

உங்கள் செல்வத்தை நான் கேட்கவில்லை ஒரு ஆதரவுதான் நான் கேட்கிறேன்.

உங்கள் மௌனத்தை நான் கேட்கவில்லை இந்த ஒதுக்கம்தான் ஏன் கேட்கிறேன்?



எழுதியவர் மு. புவனேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை ( கணிதம் ), அரசு முஸ்லீம் மேனிலைப்பள்ளி, வேலூர் - 632001


JOIN KALVICHUDAR CHANNEL