ஆப்பிள் ஒன்றை எடுத்துச் சாப்பிடுகிறோம். உடனே அந்த ஆப்பிள் நம் உடலுக்கு சக்தி தந்துவிடுமா? நிச்சயமாகக் கொடுக்காது. அது அரிசி சாதமாக இருக்கட்டும் அல்லது கோதுமையில் செய்த சப்பாத்தியாகக்கூட இருக்கட்டும்... நாம் சாப்பிடும் எதுவாக இருந்தாலும், அது செரிமானம் முடிந்து, உடலுக்குத் தேவையான சக்தியைத் தருவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் ஆகும். அந்த நேரத்தில், பெரிய அளவில் நாம் உண்ணும் உணவை, சிறு மூலக்கூறுகளாக மாற்றும் வேலையை உணவு மண்டலம் கச்சிதமாகச் செய்கிறது. இப்படி நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக எவ்வளவு நேரம் ஆகும், செரிமானம் எப்படி நடைபெறுகிறது. ஒவ்வொரு உணவும் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும்.
உணவு, வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எனப் பயணம் செய்து, செரிமானமாகிறது. நம் வாயில் சுரக்கும் எச்சில்தான் செரிமானத்தின் தொடக்கம். இது, பெரிய மூலக்கூறுகளாக இருக்கும் உணவுப் பொருட்களை ஈரப்பதமாக மாற்றி, உடைத்து எளிதாக உணவுக்குழாய் வழியாக இரைப்பையை நோக்கிச் செல்லவைக்கிறது. சில மணித்துளிகள் இரைப்பையில் தங்கியிருக்கும் உணவு மூலக்கூறுகளை, செரிமான திரவங்களான (Enzymes) ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சினோஜன் (Pepsinogen), லிப்பேஸ் (Lipase) மற்றும் அமிலேஸ் (Amylase) ஆகியவை செரிமானமாக உதவுகின்றன.
இப்படிச் செரித்த உணவு, சிறுகுடலுக்குப் பயணம்செய்து, முழுமையாக ஜீரணமாகிறது; அதிலிருந்து கிடைக்கும் சக்தியை கல்லீரல் சேமித்துவைத்து, உடலின் பல்வேறு பாகங்களுக்கும் தேவையான சக்தியை அளிக்கிறது. பெருங்குடலில் நீர் மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகள் மலக்குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இப்படி உணவானது தனது பயணத்தை நிறைவுசெய்கிறது.
`நொறுங்கத் தின்றால் நூறு வயது’ எனும் பழமொழிக்கேற்ப, நாம் வாயால் நன்கு, கடித்து, மென்று, அரைத்து உண்டால், பாதி செரிமானத்தை வாயிலேயே முடித்துவிடலாம். நாம் உண்ணும் உணவுகள் நமக்குத் தேவையான சக்தியை அளிப்பதற்கு ஆகும் கால அளவைத் தெரிந்துகொள்ளவதன் மூலமாக செரிமானத்தையும் புரிந்துகொள்ள முடியும். அவற்றில் சில உணவுகள் ஜீரணமாக ஆகும் காலம் கீழே....
* காலியான வயிற்றில் தண்ணீர் - உடனடியாக குடலுக்குச் சென்றுவிடும்.
* பழங்களைச் சாறுகளாக (நீர்க்க) எடுத்துக்கொண்டால் - 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும்.
* திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி (கெட்டியான பழச்சாறு) மற்றும் காய்கறி சூப் - 20 முதல் 30 நிமிடங்கள்.
* பால், பாலாடைக் கட்டி, சோயா பீன்ஸ் - 2 மணி நேரம்.
* வேகவைக்காத பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிட்டால் - 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகலாம்.
* வேகவைத்த காய்கறிகள் - 45 முதல் 50 நிமிடங்கள் வரை.
* வேகவைத்த தானியம் (அரிசி, ஓட்ஸ்) மற்றும் பருப்பு வகைகள் - ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.
* விதை மற்றும் கடலை வகைகள் - 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம்.
* மீன் - 30 முதல் 60 நிமிடங்கள் வரை.
* சிக்கன் - 2 மணி நேரம் ஆகலாம்.
* ஆடு மற்றும் மாட்டுக்கறி வகைகள் - 3-ல் இருந்து 4 மணி நேரம்.
முக்கியமாக ஒன்று... எல்லோருக்குமே ஜீரணமாகும் நேரம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரின் உடல் தன்மை, எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், அளவைப் பொறுத்து வேறுபடலாம். இரவில், பிரியாணி, சிக்கன் என சாப்பிடுபவர்கள், உணவு செரிமானமாகும் நேரத்தை குறித்து கொள்ளுங்கள். அதற்கேற்ப தூங்க பழகுங்கள். இரவு உணவு உண்ட உடனே தூங்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. குறைந்தது 1-2 மணி நேரமாவது இடைவெளி தேவை. இரவு உணவை 8 மணிக்குள் முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.