'ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தையே புரட்டிப்போட்டது என்றால்,அடுத்த சில நாட்களில்,தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் (ராம மோகன ராவ்)அலுவலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை அரசு நிர்வாகத்தையே ஆட்டம் காண வைத்தது.வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால்,அமைச்சர்களும் அதிகாரிகளும் பயத்தில் உறைந்து போயினர்.
வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனையில்,அப்போதைய தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.இந்தச் சூழ்நிலையில்,சேகர் ரெட்டியுடனான தொடர்பு,அதிகார துஷ்பிரயோகம் என ராம மோகன ராவ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியானபோதும் அவரை தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது தமிழக அரசு. ராம மோகன ராவின் நடவடிக்கை 'நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக'சில ஓய்வுப்பெற்ற அதிகாரிகளும்,அரசியல் தலைவர்களும் பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்தே தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் ராம மோகன ராவ். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய அரசுக்கு சவால் விடும் வகையில் பேட்டி அளித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தார்.மேலும், 'மத்தியதொழிற்பாதுகாப்பு படை எப்படி மாநில அரசின் அலுவலகத்துக்குள் நுழைய முடியும்?' என்று கேள்வி எழுப்பியவர், 'இது இந்திய அரசியலமைப்புக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்' என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்,அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு காரணமாக நடைபெற்ற ஆட்சி,அதிகாரப் போட்டி சண்டையில் ராம மோகன ராவ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள்அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட்டன. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு சென்று விட,அவருடைய ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி ஏற்றார்.இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராம மோகன ராவுக்கு தற்போது 'தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர்' பதவி வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இருந்தவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பதுஅரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுகுறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலுக்கும் சந்தேகங்கள் !
தற்போது உள்ள சூழலில், ராம மோகன ராவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன.மணல் மாஃபியாவான சேகர் ரெட்டியுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே ராம மோகன ராவ் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.ராம மோகன ராவ் குற்றமற்றவராக இருந்தால்,அவரை பதவியிலிருந்து விலக்க காரணம் என்ன?அல்லது அவர் குற்றம் செய்திருக்கிறார் என்பது உண்மையானால்,அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கியது சரிதானா?இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்ற நிலையில் அவற்றுக்கெல்லாம் விளக்கம் தராமல்,தற்போது அவரைப் பதவியில் அமர்த்துவதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராம மோகன ராவுக்கு பதவி! ரெட்டிகள் உற்சாகம்
இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, "சசிகலா சொன்னது மற்றும் சொல்லாததையும் செய்து காட்டி பாராட்டைப் பெற்றவர் ராமமோகன ராவ்.அந்த விசுவாசத்தின் அடிப்படையில்தான் தற்போது அவரைப் பதவியில் அமர்த்தியுள்ளது சசிகலா தரப்பு.அதுமட்டுமன்றி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில்,ராம மோகன ராவ் பதவியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார்கள்.அதனை உறுதி செய்யும் வகையில், 'தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த முதலமைச்சர் நான்தான்' என்று ராம மோகன ராவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்.மேலும்,சேகர் ரெட்டியை வெளியில் எடுக்கும் வேலைகளையும் செய்து வருகிறார்.ஆனால்,ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி கொடுத்திருப்பது சில உயர் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை.
சிப்காட்டில் ராம மோகன ராவ் நுழைந்திருப்பது மற்றொரு ரெட்டிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.ராமமோகன ராவ் பதவியில் இருந்து விலக்கப்பட்டபோது,அடுத்த ஒப்பந்ததாரர் சுப்பாரெட்டிதான் சிறைக்குப் போவார் என்றார்கள்.ஏனெனில்,ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான இவருக்கே கடந்த ஆறு வருடங்களாக அனைத்து ஒப்பந்தங்களும் ராம மோகன ராவ் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.சிப்காட்டில் அவ்வளவு எளிதில் ஒப்பந்தம் பெற முடியாது.ஆனால் சுப்பாரெட்டிக்கு மட்டும் எளிதில் ஒப்பந்தம் கிடைத்துவிடும்.சிப்காட்டில் மட்டும் சுமார் 600 -கோடிக்கும் மேலான ஒப்பந்தங்களை சுப்பாரெட்டிதான் எடுத்துள்ளார்.அந்த அளவுக்கு அவர் ராம மோகன ராவ் உள்ளிட்ட மேலிட அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்தார்.
ஒட்டுமொத்தத்தில்,ராமமோகன ராவ் சிப்காட்டின்முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டிருப்பது சுப்பாரெட்டிக்கு தொழில் ரீதியான மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.இன்னொருபுறம் சேகர் ரெட்டியின் சிறைவாசத்தை முடித்துவைக்கும் முயற்சியில் ராம மோகன ராவ் இறங்கியிருப்பதால்,அவருக்கும் இது பெரும் மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது.
எது எப்படியோ....இப்படி ரெட்டிகள் மூலமாக பெற்ற வருமானத்தை மிகச் சரியாக பங்கீட்டதன் விசுவாசமே தற்போது மீண்டும் ராம மோகன ராவ் பதவிக்கு வந்திருப்பதன் ரகசியம்." என்றார் அந்த அதிகாரி.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||