யூ டியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பிளஸ் 2 தவிர, வேறு எந்த வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறவில்லை. இதில் 9ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது.
எனினும் பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதில், 10ம் வகுப்பு மாணவர்கள் கடந்த காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி என்று அறிவிக்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவித்தன.
இச்சூழலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், யூ டியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுவதாக கூறியுள்ளார்.
அதே நேரம், தடை உத்தரவு நீங்கும் வரை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க இயலாது என்று தெரிவித்த அவர், ரேஷன் அட்டைக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டுமென்ற ஸ்டாலினின் கோரிக்கை பற்றி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை பார்க்கும் போது 10ம் வகுப்பு தேர்வு தள்ளிப் போகலாமே தவிர, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிகிறது.