t> கல்விச்சுடர் அரிதாரம் பூசாத கதாநாயகர்கள் கிராத்தூரான் கவிதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 April 2020

அரிதாரம் பூசாத கதாநாயகர்கள் கிராத்தூரான் கவிதை



கடும் வெயிலின் தாக்கத்தை வெளிக்காட்டவில்லை
கொடும் வார்த்தை பேசுவோரை ஒதுக்கி வைக்கவில்லை
தடுமாற்றம் சிறிது கூட அவர் செயலிலில்லை
தடம் மாறிச் செல்வதற்கும் அவர் விரும்பவில்லை.

கடந்த காலப் பழிசொல்லை நினைவில் வைக்க வில்லை
அன்று என்ன சொன்னாய் என்று கேள்வி கேட்கவில்லை
மருத்துவராய், செவிலியராய், காவலராய், ஊழியராய்
சுயநலத்தை மறந்துவிட்ட பொதுநலக் கதாநாயகர்கள்.

குடும்பத்தைப் பார்க்காமல், குழந்தைகளைக் கொஞ்சாமல்
கணவனோடு சேராமல்
மனைவியோடு பேசாமல்
பாசத்தைப் பூட்டிவைத்துக் காதலை ஒதுக்கி வைத்து
கடமையைக் கடவுளாகச் செய்து நிற்கும் நாயகர்கள்.

அரிதார நாயகர்கள் அறைக்குள்ளே ஒளிந்து நிற்க
பரிதாப நாயகர்கள் தற்காலிக நாயகர்கள்
தேவை முடிந்துவிட்டால் கறிவேப்பிலை ஆகிடுவர்
நன்றி கெட்ட மனித இனம் நடிப்பவரை வணங்கிடுவர்.

பாலபிஷேகம் செய்து பணிவிடைக்குத் தகுந்தவர்க்கு
எச்சில் அபிஷேகமன்றோ பரிசாகக் கொடுக்கிறார்கள்
பாவத்தின் சம்பளத்தைப் பெற்றபின்னும் அடங்காமல்
நெறிகெட்டு அன்றோ தறுதலைகள் அலைகிறார்கள்.
தன் நலம் பாராது எம் நலன் பேணி நிற்கும்
மருத்துவரே, செவிலியரே, சுகாதார ஊழியரே
காவலரே, நியாயவிலைக் கடை இருக்கும் ஊழியரே
உம் சேவை போற்றுகின்றேன்
உம்மையெல்லாம் வணங்குகின்றேன்.

உமக்காக வேண்டுகின்றேன்
உமைக் காக்க வேண்டுகின்றேன்.

*கிராத்தூரான்

JOIN KALVICHUDAR CHANNEL