. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 January 2021

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!


தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 10 மாதமாக மூடப்பட்டுள்ள நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி இன்று முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் இன்று முதல் பள்ளிக்கு வர உள்ளனர்.
பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.


பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ - மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும், பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் நேரடியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சென்னை செனாய்நகரில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல சென்னை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வின்போது பள்ளி வளாகம் தூய்மையாக உள்ளதா? மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் இருக்கிறதா? வகுப்பறைகள், கழிவறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் 2 நாட்கள் வகுப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும், அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் அரசு பரிசீலனை மேற்கொண்டு, 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு பாடங்களை குறைத்துள்ளது. அதன் விவரங்களையும் சமீபத்தில் கல்வித்துறை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.