. -->

Now Online

FLASH NEWS


Wednesday 14 April 2021

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து நாளை முக்கிய முடிவு!


தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே தொற்று வேகமாக பரவியதை அடுத்து 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆனால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என ராமதாஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு 15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தமிழகத்திலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய முடிவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன..