. -->

Now Online

FLASH NEWS


Wednesday 21 July 2021

ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

”அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைக் களையும் வகையில் ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெறும் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வையொட்டி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, நிர்வாகப் பணியில் ஈடுபடலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி மிக விரைவில் நடத்தப்படும். கல்வித் தொலைக்காட்சிக்குக் கூடுதல் சேனல்களைத் தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பிளஸ் 2 வகுப்பில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள், அக்டோபர் மாதம் தேர்வெழுதலாம் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தால் மட்டுமே அந்தத் தேர்வும் நடத்தப்படும். சிறப்புத் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, முதல்-அமைச்சரிடம் ஆலோசனை கேட்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்துவது தொடர்பாக கொரோனா சூழலை ஆய்வு செய்து, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு செய்யப்படும். பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 22-ம் தேதி மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்”.

இவ்வாறு அவர் கூறினார்.