அப்பாவின் அரவணைப்பு
முகத்திலே கோவமும் அகத்திலே பாசமும்
ஒருசேரக் காட்டிட எப்படித்தான் முடியுதோ
பிள்ளையோட சாதனைய பிறருக்குச் சொல்கையில
உரிமையும் பெருமையும் ஏனப்படித் தவழுதோ!
தூங்கிவிட்டதா நினச்சு நெற்றியத் தடவையிலே
அத்தனை மென்மையும் எங்கிருந்து வருகுதோ
காய்ச்சலான்னு கழுத்திலே புறங்கைய வைக்கயிலே
விரல்களெல்லாம் எதனால அப்படியே நடுங்குதோ!
அப்பாவின் அரவணைப்பு ஆயிரம் யானைபலம்
பின்னாலே இருந்தாலும் பிள்ளைக்கது குதூகலம்
புரியாமப் போனாலும் தெரியறப்ப மனசெல்லாம்
அறியாமப் போனதுக்காய் அழுதிடுமே காலமெல்லாம்.
*கிராத்தூரான்