. -->

Now Online

FLASH NEWS


Friday 24 September 2021

வயிற்று வலியா? காரணங்களும் தீர்வும்..!




திடீரென தோன்றும் வயிற்று வலிகள் ஒரு சில மணி நேரத்தில் அல்லது ஓரிரு நாட்களில் மறைந்து விடும். ஆனால் தொடர் வயிற்று வலிகள் அல்லது தினமும் வயிற்று வலி ஏற்படுவோர் அதை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர்.



சாதாரண வயிற்று வலிகள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கத்தால் ஏற்படுபவை. அவற்றில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது. தொடர் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை தேவை.

சாதாரண வயிற்று வலியானது உணவின் காரணமாக ஏற்படலாம். உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ள நேரும்போதும் வயிற்று வலிகள் ஏற்படும். இது அதிகமாக இரவு நேரங்களில்தான் வருகின்றன. காரணம், தாமதமாக உண்ணுவது, அதிகமாக உண்ணுவது போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் வயிற்றில் உள்ள உணவு அனைத்தும் செரிமானம் ஆனபின் உறங்க சென்றால் இந்தவித வயிற்றுவலிகள் வராது.

ஆனால், தாமதமாக உணவு அருந்திவிட்டு உடனே படுக்கச் செல்வதால் வயிற்றில் உள்ள உணவுகள் அப்படியே தங்கிவிடுகின்றன. இரவில் உடலுக்கு எந்த வேலையும் நாம் கொடுப்பதில்லை. அதனால் செரிமானத்திற்கு தாமதமாகிறது. எனவே, உறங்கச் செல்லும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது.இரவில் உடலுக்கு வேலை குறைவு என்பதால் குறைத்து உண்ணுவது அவசியம். சிலர் பகலில் உறக்கம் வருவதால் குறைவாக உண்டு இரவு உறங்கத்தானே செல்கிறோம் என்று வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவர்.

இதுவும் பிரச்னைக்கு வழிவகுக்கும். இவ்வாறு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலை உணவில் பாதி அளவை மட்டுமே இரவில் சாப்பிட வேண்டும். இவ்வாறு உணவால் தோன்றும் வயிற்று வலிகள் தோன்றி சில நேரங்களில் மறைந்துவிடும். ஆனால், இதுவே வழக்கமானால் சில தீவிர பிரச்னைகளும் வரநேரிடலாம். வயிற்றுவலிகள் சில நோய்களின் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். சிறுநீரகத்தில் தோன்றும் கல், அல்சர், வாயுப்பிரச்னைகள் போன்றவற்றின் தொடக்கமாகவும் இருக்கும்.

சரியான உணவுப் பழக்கவழக்கத்தின் மூலம் இவற்றிலிருந்து வெளியே வரலாம். இதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் நோயின் பிரச்னை தீவிரமடையும். தொடர் அல்லது தீவிர வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் சரியான முறை. தானாகவே மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தானாகவே மருந்து எடுத்துக் கொள்ளும்போது அது உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பின் அவற்றை மேலும் தீவிரப்படுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சில முக்கிய காரணங்கள்

சிலருக்கு உணவுக்குழாயும் உணவுப்பையும் சேரும் இடத்தில் வலி ஏற்படலாம். இந்த வலியானது தவறான உணவுப் பழக்க வழக்கம் அல்லது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் போதும் நேரிடுகிறது. அதிகமாக உணவு உட்கொள்வது, இரவு நேரங்களில் அசைவ உணவு உண்ணுவது, அதிகம் எண்ணெய் மற்றும் காரம் சேர்த்த உணவை உண்ணும்போது Gastroesophageal reflux disease, Irritable bowel syndrome போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் மற்றும் மேல் வயிற்றில் வலி ஏற்படுகிறது.