ஐந்து ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
வேலுார் கொசப்பேட்டையில், ஈ.வே.ரா., பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை வகுப்புக்கு தமிழ், பொருளாதாரம், வேதியல், இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் சங்கீதா, சுமித்ரா, புகழ், சங்கரி, லட்சுமி ஆகியோர் கடந்த மாதம் வேலுாரில் உள்ள சில பள்ளிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10:00 மணிக்கு மாணவிகள் பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலுார் தெற்கு போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், ஆசிரியர்கள் இட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களை அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என மாவட்ட கல்வி அலுவலர் முனிசாமி கூறினார். பிற்பகல் 12:00 மணி வரை மாணிவிகள் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளி ஆசிரியர்கள் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர்.