முதல்வரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் இம்மாதம் இறுதியில் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் அறிவிப்பை பேரவையில் கடந்த ஜுலை 27ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ரூ. 33.56 கோடி காலை உணவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை காலை உணவுத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளன்று செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவர்களும், திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், வேலூர், திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சேலம், திண்டுக்கல், நெல்லை, ஈரோடு, கன்னியாகுமரி, கோவை மாநகராட்சிகளில் 381 பள்ளிகளில் 37,740 மாணவர்களும் விழுப்புரம், திண்டிவனம், புதுக்கோட்டை, பெரம்பலூர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, நாமக்கல், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, செய்யாறு, ஜெயங்கொண்டம், ஆற்காடு, வாணியம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம், பரமக்குடி, காரைக்குடி, கோவில்பட்டி, மன்னார்குடி, மேட்டுப்பாளையம், மதுக்கரை நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவர்களுக்கும் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர். அதேபோல் பல மாவட்டங்களில் முதல்வரின் காலை உணவு திட்டம் மூலம் தினசரி உணவு அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் முதல்வரின் காலை உணவுத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக காலை சிற்றுண்டி சாப்பிடாமல் எத்தனையோ குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிவர்த்தி செய்யும் வண்ணம் இத்திட்டம் அமைந்தன. மேலும், பெற்றோர்களும் தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்திருந்தனர். முதன்முதலாக இத்திட்டத்தை கொண்டு வரும்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் எந்தவித தொய்வும் ஏற்பட கூடாது என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, காலை உணவு வழங்கப்படும் பள்ளிகளில் சரியான முறையில் உணவு சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்த ‘‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’’ செயலி மூலம் கண்காணிக்கப்பட்டன.தற்போது இத்திட்டத்தை விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இத்திட்டம் 1,545 அரசு பள்ளிகளில் 1.14 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது நகர்ப்புறங்களில் உள்ள 500 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. அடுத்து கூடுதலாகவும் பள்ளிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.